Published : 12 Jun 2023 04:00 AM
Last Updated : 12 Jun 2023 04:00 AM

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புக்கு எதிர்ப்பு: 5-வது நாளாக தொடரும் விவசாயிகள் உண்ணாவிரதம்

ஈரோடு: கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியில், 5-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று (12-ம் தேதி) கடையடைப்பு நடக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து, பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியில், 7-ம் தேதி முதல் விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

30-க்கும் மேற்பட்டோர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், விவசாயிகள் குடும்பத்துடன் காலை முதல் மாலை வரை அமர்ந்து போராட்டத்தை வலுப்படுத்தி வருகின்றனர். தொடர் உண்ணாவிரதத்தில் 5-வது நாளாக ஈடுபட்டுள்ள விவசாயிகள் சோர்வடைந்துள்ளனர்.

விவசாயிகளில் ஒருவர் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உண்ணாவிரதப் பந்தலில் திரண்டனர்.

உண்ணாவிரதம் நடக்கும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத்துறை வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள் போராட்டத்துக்கு கொமதேக, இந்து மக்கள் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்த நிலையில், இந்து முன்னணியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

உண்ணாவிரதப் போராட்டத்தி ஈடுபட்டு வரும் விவசாயிகளைச் சந்தித்த பின்பு, இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: கீழ் பவானி பாசன வாய்க்கால், குடிநீர், விவசாயம், மரங்கள், சுற்றுசூழல் காக்கும் மண் வாய்க்கால் ஆகும். இவற்றுக்கு கான்கிரீட் திட்டத்தால் பேராபத்து ஏற்பட உள்ளது.

இந்த வாய்க்காலைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட ஊராட்சி பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. எனவே, கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு என்ற பெயரில் கான்கிரீட் அமைப்பதன் மூலம் நீர் மேலாண்மையை அரசு கெடுக்கக் கூடாது. 65 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள மண்வாய்க்காலை, மண்ணைக் கொண்டே சீரமைத்து, மக்களின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும், என்றார்.

விசைத்தறிகள் இயங்காது: கீழ்பவானி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பெருந்துறை தினசரி மார்க்கெட்டில் இன்று (12-ம் தேதி) கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, ஈரோடு அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு, வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தினர் இன்று கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேபோல, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னிமலை பகுதியில் உள்ள விசைத்தறிகள் இன்று இயங்காது, என்று சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்.ஈஸ்வரமூர்த்தி அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x