Published : 12 Jun 2023 06:20 AM
Last Updated : 12 Jun 2023 06:20 AM

‘நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்று வேலைக்கு தேர்வான 1,425 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்று, பல்வேறு நிறுவனங்களில் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்ட 1,425 பட்டதாரிகளுக்கு, இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களது வேலைவாய்ப்புக்கு வழிகாட்டப்படுகிறது.

அந்த வகையில் திறன் பயிற்சிபெற்ற 1,425 கலை-அறிவியல் பட்டதாரிகள், வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பல்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மாணவர்களுக்கு துறை சார்ந்த திறன் பயிற்சிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கில், தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட மாபெரும் திட்டம் நான் முதல்வன் திட்டம். இதன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு நவீன பாடப் பிரிவுகளில் பயிற்சி வழங்கி, தகுதியான வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் தொடங்கப்பட்ட ஓராண்டிலேயே பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் நடத்தப்பட்ட வளாக வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 64,943 பொறியியல் மாணவர்களும், 78,196 கலை, அறிவியல் மாணவர்களும் பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். இத்தகைய வேலைவாய்ப்பு முகாம்கள் ஜூன் மாத இறுதி வரை நடத்தப்படும்.

சென்னை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம், செயின்ட் கோபைன், மைக்ரோசாஃப்ட், சதர்லேண்ட், மிஸ்டர் கூப்பர், டெக் மகேந்திரா, ஐசிஐசிஐ, இந்தியா சிமென்ட்ஸ், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங்பேடி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, நான் முதல்வன் திட்ட முதன்மைச் செயல் அலுவலர் ஜெயபிரகாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x