

சென்னை: ஆள் கடத்தலைத் தடுப்பது மற்றும் திறம்பட புலன் விசாரணை மேற்கொள்வது குறித்து புலன் விசாரணை அதிகாரிகளுக்கு ஒருநாள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னையில் குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போலீஸாருக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அணையர் அலுவலகத்தில்.. அதன் ஒரு பகுதியாக சென்னை பெருநகர காவல், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையம், மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவுகளில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர் முதல் உதவி ஆணையர் வரையிலான புலன் விசாரணை போலீஸ்அதிகாரிகளுக்கு ஆள் கடத்தலைத் தடுப்பது குறித்தும், இவ்வழக்குகளில் எவ்வாறு புலன் விசாரணை மேற்கொள்வது என்பது குறித்தும் ஒருநாள் சிறப்புப் பயிற்சி வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் அளிக்கப்பட்டது.
தடுப்பு, மீட்பு: காவல் கூடுதல் ஆணையர்கள் லோகநாதன் (தலைமையிடம்), மகேஸ்வரி (மத்திய குற்றப்பிரிவு) தலைமையில் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு மனித கடத்தலைத் தடுப்பது மற்றும் புலன் விசாரணை மேற்கொள்வது குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி வகுப்பில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பி.என் நாயர்,வழக்கறிஞர் ரோசன்னா ஆகியோர்மனித கடத்தல் மற்றும் கடத்தல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும், குழந்தை கொத்தடிமைகள் குறித்தும் அதனைத் தடுக்கும் விதம் குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும், குழந்தைகள் மற்றும் மனித கடத்தல் நடக்காமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், இவ்வழக்குகளை எவ்வாறு கையாள வேண்டும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.
சைபர் கிரைம் பிரிவு: சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் வினோத்குமார், கடத்தல் சம்பவங்களில் இணையதளம் வழியாக சைபர் கிரைம் பிரிவு உதவியுடன் எதிரிகளைக் கண்டறிவது குறித்தும், அவர்களின் இருப்பிடம் நகர்தல் குறித்தும் கண்டறிந்து கடத்தப்பட்டவர்களை மீட்பது குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணைஆணையர் வனிதா உட்பட உதவிஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் திரளாகக் கலந்து கொண்டனர்.