

சென்னை: கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்களை இறக்கினால் 14420 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் பலர் இறக்கின்றனர். அவ்வாறு இறப்பவர்களில், இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
அதனால் தமிழகத்தில் விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் இறப்பதை தடுக்கஅரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரப் பகுதியில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்தாமல், தொழிலாளர்களை இறக்கினால் அது தொடர்பாக 14420 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என சென்னை குடிநீர் வாரிய ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியம் மூலம் உரிமம் பெற்ற லாரி உரிமையாளர்கள் மட்டுமே கழிவுநீர்த் தொட்டியிலிருந்து கழிவுநீரை அகற்ற வேண்டும். இதுநாள் வரையிலும் உரிமம் பெறாத லாரி உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் மட்டுமே லாரிகள் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.
5 ஆண்டு சிறை: உரிமம் இன்றி கழிவுநீர் எடுக்கும் லாரிகள் தொடர்பாகவும், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய இயந்திரங்களுக்கு பதிலாக ஆட்களை இறக்கினாலும் 14420 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். கழிவநீர் தொட்டிகளில் தொழிலாளர்களை இறக்கினால் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும்.
உரிமம் இன்றி லாரிகளில் கழிவுநீர் அகற்றினால் முதல் விதிமீறலுக்கு ரூ.25 ஆயிரம், 2-வது முறை விதிமீறலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடந்து விதிமீறும் லாரிகள் உரிய சட்ட விதிகளின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.