Published : 12 Jun 2023 06:15 AM
Last Updated : 12 Jun 2023 06:15 AM

கோட்டூர்புரத்தில் அடையாறு ஆற்றின் கரையில் மரக்கன்று நடும் பணிகளை தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு

சென்னை: சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை சார்பில் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பூங்கா மேம்பாடு, மரக்கன்று நடும் பணிகளை தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு செய்தார்.

தமிழக அரசின் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை சார்பில் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை தலைமைச் செயலர் இறையன்பு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோட்டூர்புரம் காந்தி நகரில்அடையாறு ஆற்றின் கரையோரத்தில் அறக்கட்டளை சார்பில் பூங்கா,விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் ரூ.9.41 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர், செடிகளுடன் கூடிய நடைபாதை, குடிநீர், மின் வசதி, பசுமை புல்வெளி, அறிவிப்பு பலகை, வேலி அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், கண்காணிப்பு கேமரா பொருத்துதல், சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.

குடிநீர், கழிப்பறை வசதிகள்நல்ல முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்று தலைமைச் செயலர்இறையன்பு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அடையாறு மண்டலம் 173-வதுவார்டுக்கு உட்பட்ட கெனால் பேங்க்சாலை, பாட்ரிசியன் கல்லூரி அருகே நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் ரூ.1.99 கோடிமதிப்பீட்டில் 4.99 ஏக்கர் பரப்பளவில்அடர்வனத்துடன் கூடிய கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு 1,402 மரக்கன்றுகள் நடும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

கூவம், அடையாறு ஆறுகளின் கரையோரத்தில் கடல் பாதாம், பூவரசு, புங்கன், கடல் பூவரசு, கல்யாண முருங்கை, உதயம், மருத மரம், கடல் திராட்சை, கருவேப்பிலை, கற்பூரவல்லி, துளசி, வெட்டிவேர், அலையாத்தி உள்ளிட்ட 48 வகையை சேர்ந்த 1.22 லட்சம் மரக்கன்றுகள், செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

அடையாறு ஆற்றங்கரையில் திரு.வி.க. பாலம் முதல் பறக்கும் ரயில் பாலம் வரை ரூ.5.40 கோடி மதிப்பீட்டில் 2.4 கி.மீ. நீளத்துக்கு 35,785 மரக்கன்றுகளும், பறக்கும் ரயில் பாலம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரை ரூ.5.80 கோடி மதிப்பீட்டில் 2.2 கி.மீ. நீளத்துக்கு 23,039மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.

அவற்றையும் இறையன்பு ஆய்வுசெய்து, அங்கு உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். கோட்டூர்புரம் அருகே ஆற்றின் கரையோரத்தை சமப்படுத்தி, பலப்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், இணை ஆணையர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையர்கள் ஷரண்யா அரி, எம்.பி.அமித், தலைமை பொறியாளர்கள் எஸ்.ராஜேந்திரன் (பொது), புவனேஷ்வரன் (கட்டிடம், பூங்கா) மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x