

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3, 4, 5 ஆகிய வழித்தடங்களை நீட்டிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் அறிக்கையை இந்த மாத இறுதியில் முடித்து தாக்கல் செய்வார்கள் என்று மெட்ரோ ரயில் நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் (தற்போது கி.மீ. குறைக்கப்பட்டுள்ளது) 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன. இதுதவிர, இந்த வழித்தடங்களை நீட்டிக்கவும் ஆலோசனை நடைபெற்றது.
கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை அமைக்கப்படும் 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரை 50 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில், திருமங்கலத்தில் இருந்து முகப்பேர், அம்பத்தூர் வழியாக ஆவடி வரை 17 கி.மீ தொலைவுக்கும் நீட்டிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில், சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் வரை நீடிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இந்த நீட்டிப்பு தொடர்பாக சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, 3 நிறுவனங்கள் கடந்த மார்ச்சில் தேர்வுசெய்யப்பட்டன. இந்த நிறுவனங்கள் சாத்தியக்கூறு ஆய்வுப் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த நிறுவனங்கள் இம்மாத இறுதியில் ஆய்வு பணியை முடித்து, மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இந்த ஆய்வில் நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணம், அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த வழித்தடங்களில் பயணத் தேவை, அவற்றை கட்டுவதற்கான மதிப்பீட்டு செலவு, தேவைப்படும் பொது மற்றும் தனியார் நிதி, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும். கடந்த மார்ச் மாதம் தொடங்கி, தொடர்ந்து ஆய்வு செய்கிறார்கள். இந்த மாத இறுதியில் ஆய்வுப் பணியை முடித்து, சாத்தியக்கூறு அறிக்கையை அளிக்க உள்ளார்கள்’’ என்றார்.