

மதுரை: மதுரையில் மதுக்கடையில் விலைப்பட்டியல் வைக்காத பணியாளர்கள் 4 பேரை பணியிடை நீக்கம் செய்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னையில் சமீபத்தில், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், சில்லறை விற்பனை மதுக்கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்படுவது, மூடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து சில்லறை விற்பனை மதுக் கடைகளிலும் அதிகபட்ச விற்பனை விலைப் பட்டியலை நுகர்வோர் பார்வைக்கு நன்கு தெரியும்படி, கடையின் முன்பகுதியில் வைக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.
அதையடுத்து, மதுரை மண்டலத்திலுள்ள அனைத்து மதுக்கடைகளிலும் அதிகபட்ச விற்பனை விலைப்பட்டியல் வைக்க ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், மண்டல மேலாளர் தலைமையில் தணிக்கை குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர். அதில், மதுரை ஆழ்வார்புரம், ஆரப்பாளையம், டி.வாடிப்பட்டி, ஆண்டிப்பட்டி பங்களா ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் விலைப் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்காமல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, இக்கடைகளின் மேற்பார்வையாளர்களான செந்தில்குமார், பாலமுருகன், சரவணக்குமார், பிச்சைமாயன் ஆகிய 4 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த 4 கடைகளிலும் விலைப்பட்டியலை உடனே வைக்க, மாவட்ட மேலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட மேலாளரிடமும் உரிய விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது என, மண்டல மேலாளர் தெரிவித்தார்.