

மதுரை: தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையே ஏற்படும் தகராறுகளின் போது, தனியார் அல்லது பொதுத் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் தமிழ்நாடு பொதுச் சொத்துகள் சேத தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்படும் மோதலில் பொது அல்லது தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படும்போது, தமிழ்நாடு சொத்துச் சேதம் மற்றும் இழப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வது தொடர்பான மனுக்களில் உயர் நீதிமன்றம் முரண்பாடான உத்தரவுகள் வழங்கின.
சில நீதிபதிகள் இரு தரப்பு மோதலில் தமிழ்நாடு பொதுச் சொத்துகள் சேதத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யலாம் என்றும், சில நீதிபதிகள் அரசியல் கட்சிகள், சாதிமத அமைப்புகள் போன்ற பொது அமைப்புகள் நடத்து கின்ற கூட்டங்கள், பேரணிகள், போராட்டங்களில் ஏற்படும் சேதத்துக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும் எனவும் தீர்ப்பளித்தனர். வேறுபட்ட தீர்ப்புகள் உள்ளதால் இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு இவ்வழக்கு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இதன்படி இவ்வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி இச் சட்டம் அரசியல் கட்சிகள் உள்ளிட்டவைகளின் போராட்டம், பேரணி, பொதுகூட்டங்களின் போது ஏற்படுகின்ற சேதத்துக்கு மட்டுமின்றி தனிப்பட்ட இருதரப்பினர் அல்லது தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையே ஏற்படும் தகராறுகளின் போதும், பொது அல்லது தனியார் சொத்துகளுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டாலும் தமிழ்நாடு பொதுச்சொத்து சேதம் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கலாம் என வாதாடினார்.
பின்னர் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது: அரசியல் கட்சிகள், வகுப்புவாத, மொழி அல்லது இனக் குழுக்களால் நடக்கும் ஊர்வலங்கள், போராட்டங்கள், பிற செயல்பாடுகளின் போது, பொதுச் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு வழங்குவதற்கான பொறுப்பை ஏற்பாட்டாளர்கள் மீது நிர்ணயிக்கும் நோக்கத்தை அடைய இச்சட்டம் வரையறுத்துள்ளது.
அதே சமயம் இச்சட்டம் தனியார் சொத்துகள் சேதத்துக்கும் பொருந்துவது தெளிவாகிறது. எனவே, தனியார் சொத்துகளுக்கு தனி நபர்களால் ஏற்படுகிற சேதத்துக்கும் தமிழ்நாடு பொதுச்சொத்து சேதம் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யலாம் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.