Published : 10 Jul 2014 10:00 AM
Last Updated : 10 Jul 2014 10:00 AM

தீவிரவாதிகள் வசம் ரசாயன ஆயுத தளம்: ஐநாவுக்கு இராக் கடிதம்

இஸ்லாமிய அரசு (ஐஎஸ்ஐஎஸ்) தீவிரவாத குழு பாக்தாதின் வடமேற்கு பகுதியில் இதற்கு முன் செயல்பட்டுவந்த ரசாயன ஆயுத தளத்தை கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை ஐநா பொதுச்செயலருக்கு இராக் அரசு தெரிவித்துள்ளது.

இந்த தளத்தில் சரீன் விஷவாயு நிரப்பிய 2500 ரசாயன ராக்கெட் குண்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக இராக் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தளத்தில் ரசாயன போர் தளவாடங்களும் இருக்கக்கூடும் என்றும் இராக் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விவரம் அடங்கிய கடிதத்தை ஐநா பாதுகாப்புச் செயலர் பான் கி மூனுக்கு இராக்கின் ஐநா தூதர் முகமது அலி அல்ஹாகிம் எழுதி இருக்கிறார்.

ரசாயன ஆயுதங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள முத்தன்னா தளத்துக்குள் ஜூன் 11ம் தேதி நுழைந்த தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களிடமிருந்து ஆயுதங்களையும் இதர சாதனங்களையும் கைப்பற்றிக் கொண்டனர். இந்த தளத்தில் உள்ள பதுங்கு குழிகளையும் தீவிரவாதிகள் கைப் பற்றினர். இங்கு சோடியம் சயனைடு விஷப்பொருள் இருப்பதாக 2004ல் ஐநா தரப்பிலேயே தெரிவிக்கப் பட்டுள்ளது என்ற விவரத்தை அந்த கடிதத்தில் அல்ஹாகிம் சுட்டிக்காட்டியுள்ளார்.

53 சடலங்கள் கண்டெடுப்பு

இதனிடையே, பாக்தாதின் தெற்கே உள்ள பாபில் மாகாண தலைநகரான ஹிலா பகுதியில் குண்டடிபட்ட நிலையில் 53 சடலங்கள் கிடப்பதை இராக் படைவீரர்கள் புதன்கிழமை கண்டறிந்தனர். ஒருவாரத்துக்கு முன் இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x