Published : 30 Oct 2017 10:25 AM
Last Updated : 30 Oct 2017 10:25 AM

சென்னை மாநகராட்சி சார்பில் பாண்டிபஜாரில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கடைகளுக்கு வாடகை நிர்ணயம்

சென்னை மாநகராட்சி சார்பில் பாண்டிபஜாரில் கட்டப்பட்டுள்ள நடைபாதை வியாபாரிகளுக்கான வணிக வளாகத்தில் இடம்பெற்றுள்ள கடைகளுக்கு வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை பாண்டிபஜாரில், மாநகராட்சி சார்பில் நடைபாதை வியாபாரிகளுக்காக வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள 629 கடைகளில் 529 கடைகள், நடைபாதை வியாபாரிகளுக்கும், பழைய வளாகத்தில் இருந்த கடைக்காரர்கள் 100 பேருக்கும், பெரிய வியாபாரிகளுக்கு 14 கடைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய, கோடம்பாக்கம் மண்டல அலுவலருக்கு, மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.

புதிய குழு அமைப்பு

அதனைத் தொடர்ந்து மண்டல அலுவலர் தலைமையில், மண்டல உதவி வருவாய் அலுவலர், கணக்கு அலுவலர் உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, வியாபாரிகளுடன் கலந்தாலோசித்து, வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, 1 முதல் 175 எண்களைக் கொண்ட கடைகளுக்கு, ஒரு சதுர அடி ரூ.65 எனவும், 176 முதல் 350 வரையிலான கடைகளுக்கு ஒரு சதுரஅடி ரூ.60 எனவும், 351 முதல் 525 வரையிலான கடைகளுக்கு ஒரு சதுரஅடி ரூ.55 எனவும், 526 முதல் 629 வரையிலான கடைகளுக்கு ஒரு சதுர அடி ரூ.40 எனவும் மாத வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அனுமதி அளிக்குமாறு மண்டல அலுவலர் சார்பில், மாநகராட்சி ஆணையரிடம் கோரப்பட்டது. அதன் அடிப்படையில், வாடகை நிர்ணயத்தை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x