

நடிகர் விஜய்யின் 'மெர்சல்' பட பேனர் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார்.
நடிகர் விஜய்யின் படமான 'மெர்சல்' தீபாவளியன்று வெளியானதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் திருப்போரூரில் உள்ள ராஜீவ் காந்தி சாலையிலுள்ள மசூதி கோயில் தெருவில், 30 அடிக்கு 'மெர்சல்' படத்தின் பேனரை வைத்திருந்தனர்.
இந்த பேனர் எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்தது. இதனால் அவ்வழியாக காரில் சென்ற தேவநாதன் (38) என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் அவருடன் காரிலிருந்த அவரது குடும்பத்தினருக்கும் காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் செங்கல்பட்டு துணை ஆட்சியர் ஜெயசீலனிடன் புகார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து ஜெயசீலன் கூறும்போது, ''அப்பகுதியில் பேனர் வைக்க நாங்கள் அனுமதி அளிக்கவில்லை. இது அங்கீகரிக்கப்படாதது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இந்த விபத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் கூறும்போது, ''பேனர் சரியாக பொருத்தப்படாமல் இருந்தது. பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு விளைவிக்கும் இது போன்ற பேனர்களுக்கு போக்குவரத்து போலீஸ் அனுமதி அளிக்கக் கூடாது'' என்றார்.