Last Updated : 15 Oct, 2017 10:15 AM

 

Published : 15 Oct 2017 10:15 AM
Last Updated : 15 Oct 2017 10:15 AM

போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.10.33 கோடி இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 25,846 தொழிலாளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.10.33 கோடி இடைக்கால நிவாரணம் தர மேலாண்மை இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வுபெற்ற மற்றும் பணியிலுள்ள தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பலன்களை வழங்கக் கோரும் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் தர நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதையடுத்து அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு விடுமுறை ஊதியத்தில் இடைக்கால நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து கோட்டங்களின் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிதி மேம்பாட்டு நிறுவன இணை மேலாண்மை இயக்குநர் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத் தலைவர் அலுவலகத்தின் சிறப்பு அலுவலர் ஏ.தர்மராஜ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து 30.6.2017-க்குள் ஓய்வுபெற்று முழு ஓய்வூதிய பலன்கள் பெறாதவர்களின் வங்கிக் கணக்கில் அக்.17-க்குள் இடைக்கால நிவாரணமாக ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை பெருநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லை கோட்டங்களில் உள்ள மொத்தம் 25,846 ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.10,33,84,000 வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x