Published : 31 Oct 2017 03:50 PM
Last Updated : 31 Oct 2017 03:50 PM

பருவமழையால் எழுச்சிப் பயணம் ஒத்திவைப்பு: ஸ்டாலின் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழையில் எழுச்சிப் பயணம் ஒத்திவைக்கப்படுகிறது என்றும், மழை வெள்ளத்திலிருந்து மக்களைக் காப்பதற்கு திமுகவினர் களமிறங்க வேண்டும் என்றும் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத, அதிமுக ஆட்சியின் அவலங்களை எதிர்த்து மாநிலம் முழுவதும் மாபெரும் எழுச்சிப் பயணம் மேற்கொள்வேன் என்று அறிவித்து, நவம்பர் முதல் வாரத்தில் இந்தப் பயணத்தை தொடங்குவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகளில் திமுக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் திடீரென்று கடுமையாகி சென்னை மற்றும் புறநகர் மக்களும் கடலோர மாவட்ட மக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.

ஒரு நாள் மழையையே சமாளிக்க முடியாத வகையில் அதிமுக அரசின் நிர்வாகம் செயலிழந்து, மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆகவே மக்கள் படும் சிரமங்ளைக் கருத்தில் கொண்டு, என்னுடைய எழுச்சிப் பயணம் தற்போதைக்கு வேறு ஒரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

அலங்கோல ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாக பல இடங்களில் சாலைகளில் வெள்ளமென மழை நீர் தேங்கி நிற்பதையும் அதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டுக் கூட வெளியேற முடியாமல் தவிப்பதையும் காணும் போது, இந்த அரசை இனியும் நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு வர வேண்டியதிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த கனமழை மேலும் நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்திருக்கும் நிலையில், மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஏற்கெனவே நான் அறிவுறுத்தியது போல் திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது.

நிர்வாக ரீதியாக தோல்வியடைந்து விட்ட இந்த ஆட்சியை நீக்கும் எழுச்சிப் பயணம் வேறு ஒரு தேதியில் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் - அப்போது நான் உங்களை எல்லாம் வந்து சந்திப்பேன் என்றும், தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், திமுகவினர் அனைவரின் கவனமும் கன மழை பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றும் பணிகளிலேயே இருந்திட வேண்டும்'' என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x