

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்துக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக 10 மரக்கன்றுகள் நடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்துக்கு அப்பகுதியில் உள்ள 600 மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அவற்றில் சுமார் 200 மரங்கள் வெட்டப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாப தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில், "அடுத்த 60 ஆண்டுகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் வகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை மறு வடிவமைப்பு செய்யும் பணியை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது. தெற்கு ரயில்வே சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான அமைப்பாகும். ரயில்வே வளாகத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள மரங்கள் தான் அதற்கு சாட்சி.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 114 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம். மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நில பற்றாக்குறை இந்த மறு சீரமைப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் பெரும் தடையாக உள்ளது. ரயில்வே குடியிருப்புகளை இடிப்பது மற்றும் மரங்களை வெட்டுவது என்று கடினமான முடிவுகள் எடுக்க வேண்டி உள்ளது. ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் தொடர்பாக 318 மரங்கள் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டது. இந்த 318 மரங்களை வெட்ட மாவட்ட பசுமைக் குழுவின் அனுமதியை ரயில்வே நிர்வாகம் பெற்றுள்ளது. வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சமாக வைத்திருக்க நாங்கள் நேர்மையான முயற்சிகளை எடுத்துள்ளோம்.
பாதிக்கப்படும் 318 மரங்களில் 103 மரங்கள் ரயில்வே வளாகத்தில் உள்ள வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்படும். 33 மரங்களின் கிளைகளை சீர் செய்து மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படும். 182 மரங்கள் மட்டுமே பாதிக்கப்படும். மேலும் 1:10 என்ற விகிதத்தில் மரக்கன்றுகள் நடப்படும். அதாவது, வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக 10 மரக்கன்றுகள் நடப்படும். தெற்கு ரயில்வே சார்பில் 2022-23ல் 1.18 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.