பொது சொத்து சேத தடுப்பு சட்டம் குறித்த வழக்கு - உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
Updated on
1 min read

மதுரை: தனி நபர்களுக்கு இடையே ஏற்படும் தகராறுகளின் போது தனியார் அல்லது பொது சொத்துக்களுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டாலும் தமிழ்நாடு பொது சொத்துக்கள் சேததடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்படும் மோதலில் பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் போது, தமிழ்நாடு சொத்து சேதம் மற்றும் இழப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வது தொடர்பான மனுக்களில் கீழ் நீதிமன்றங்கள் முரண்பாடான உத்தரவுகளை வழங்கி உள்ளன. தனி நபர்கள் மோதலில் தமிழ்நாடு பொது சொத்துக்கள் சேதத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்றும், அரசியல் கட்சிகள், ஜாதிமத அமைப்புகள் போன்ற பொது அமைப்புகள் நடத்துகின்ற கூட்டங்கள், பேரணிகள், போராட்டங்களில் ஏற்படுகிற சேதத்திற்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும் என்றும் தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

வேறுப்பட்ட தீர்ப்புகள் உள்ளதால் இதற்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்விற்கு மாற்றப்பட்டது. வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இந்த சட்டம் தனிப்பட்ட இரு தரப்பினர் அல்லது தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையே ஏற்படும் தகராறுகளின் போது பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டாலும் தமிழ்நாடு பொது சொத்து சேதம் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்கலாம் என்று பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதாடினார்.

பின்னர் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு: ''அரசியல் கட்சிகள் அல்லது மத அமைப்புகள், மொழி அல்லது இன குழுக்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள் அல்லது பிற செயல்பாடுகளில் ஈடுபடும்போது, பொது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கான பொறுப்பை ஏற்பாட்டாளர்கள் மீது நிர்ணயிக்கும் நோக்கத்தை அடைய இந்த சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த சட்டம் தனியார் சொத்துக்களுக்கும் பொருந்தும் வகையிலும், தனியார் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்தையும் குற்றமாக்குவதே சட்டத்தின் நோக்கம் என்பது தெளிவாகிறது.

தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவதே சட்டமியற்றுபவர்களின் நோக்கம். எனவே, அரசியல் கட்சிகள் உள்ளிட்டவற்றின் போராட்டம், பேரணி, பொதுகூட்ட சமயங்களில் ஏற்படுகின்ற சேதத்திற்கு மட்டுமின்றி, பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு தனி நபர்களால் ஏற்படுகிற சேதத்திற்கும் தமிழ்நாடு பொது சொத்து சேதம் சட்டத்தின்படி விசாரணை செய்யலாம்." இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in