Published : 11 Jun 2023 06:25 AM
Last Updated : 11 Jun 2023 06:25 AM
மதுரை: சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ படித்தவர்கள்தான் தகுதியானவர்கள் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அமுதவாணன், விருதுநகர் மாவட்டம் ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த இளங்கோவன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 761 சாலை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரியில் வெளியிட்டது.
இதற்கு விண்ணப்பிக்க கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த பணிக்கு சிவில் இன்ஜினியரிங், டிப்ளமோ முடித்தவர்கள்தான் தகுதியானவர்கள் என்று கூறி, அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ஐடிஐ படித்தவர்களுக்கு சாலை ஆய்வாளர் பணி வழங்கவும், சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: சாலை ஆய்வாளர் பணி நியமனத்தை பொறுத்தவரை, கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐடிஐ முடித்ததற்கான சான்றிதழ் கட்டாயம் என விதிமுறைகள் கூறுகின்றன.
ஆனால், டிஎன்பிஎஸ்சி நேரடி டிப்ளமோ, இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. இதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.
எனவே, சாலை ஆய்வாளர் பணிக்கு கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐடிஐ படித்து சான்றிதழ் பெற்றுள்ளவர்கள்தான் தகுதியானவர்கள். அவர்களின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT