Published : 11 Jun 2023 06:41 AM
Last Updated : 11 Jun 2023 06:41 AM
மதுரை: நெல்லையப்பர் கோயிலில் திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் சுவடி உட்பட 13 அரிய சுவடிகளை இந்து சமய அறநிலையத் துறையின் ஓலைச் சுவடிகள் நூலாக்க திட்டப் பணிக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள 42,020 கோயில்களில் உள்ள அரிய ஓலைச் சுவடிகளை திரட்டி புதுப்பிக்கும் பணிக்காக ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணி எனும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்காக சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு கடந்த 11 மாதங்களில் 232 கோயில்களில் கள ஆய்வு செய்து முடித்துள்ளது. இதன்மூலம் சுருணை ஏடுகள் 1,80,612-ம், இலக்கியச் சுவடிக் கட்டுகள் 348 (சுமார் 33,000 ஏடுகள்), தாள் சுவடிகள் 5-ம் கண்டறியப்பட்டுள்ளன.
திட்ட ஒருங்கிணைப்பாளர் சு.தாமரைப்பாண்டியன் தலைமையில் சுவடியியலாளர்கள் ரா.சண்முகம், க.சந்தியா, நா.நீலகண்டன், மா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் கள ஆய்வு செய்தனர். அப்போது சில அரிய ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்தனர்.
இதுகுறித்து சு.தாமரைப்பாண்டியன் மதுரையில் கூறியதாவது: நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் பாதுகாத்து வந்த 10 செப்பு பட்டயங்களை ஆய்வு செய்தோம். பின்னர் கிரந்த எழுத்து வடிவில் அமைந்த வேணுவ நாத ஸ்தல புராணம், சைவ அக்னி காரியம், ஸ்ரீ சக்கர பிரஷ்டா விதி, அபஸ்தம்ப அமரம், ஸ்ரீசக்ர பூஜை, சைவ சந்நியாசி விசயம், வேணுவ நாத லீலா, வைசாக புராணம், சங்காபிஷேக விதி, நித்திய பூஜாவிதி, க்ஷிரா அபிஷேக விதி, சகஸ்த நபணம் ஆகிய 12 ஓலைச்சுவடிக் கட்டுகள் கிடைத்தன.
இது தவிர, திருஞானசம்பந்தர் அருளிச்செய்த முதல் மூன்று திருமுறைகள் அடங்கிய தேவாரப் பாடல்கள் அடங்கிய சுவடிகளும் கிடைத்தன. சுவடியின் தொடக்க பக்கத்தில் ‘தோடுடைய செவியன்’ எனும் பாடல் எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள எழுத்தமைதி மூலம் சுவடி பிரதி செய்யப்பட்ட காலம் 200 ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
சுவடியில் மொத்தம் 281 ஏடுகள் உள்ளன. சுவடியின் இறுதியில் ‘திருஞானசம்பந்தரான ஆளுடைய பண்டாரத்தின் மூன்றாம் திருமுறை முற்றும், ஆக திருக்கடைக்காப்பு 383. பூமிநாத சுவாமி பாதாரவிந்தமே கெதி, நமச்சிவாய மூர்த்தி’ என்ற குறிப்பு உள்ளது. நல்ல நிலையிலுள்ள இச்சுவடிகளை முழுமையாக ஆய்வு செய்தால் திருஞானசம்பந்தரின் பாடல்களை ஒப்பு நோக்கி பாடபேதம் நீக்கி செம்பதிப்பு நூலாக கொண்டு வரலாம். மேலும் செப்பு பட்டயங்களை ஆராயும் பணி நடந்து வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT