Published : 11 Jun 2023 04:05 AM
Last Updated : 11 Jun 2023 04:05 AM
சென்னை: சென்னையில் இருந்து கோடியக்கரை வரை சென்று திரும்பும் வகையில் பெண் காவலர்கள் மட்டும் பங்கேற்றுள்ள பாய்மர படகு சாகச பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, ‘பெண் காவலர்களின் பொன் விழா ஆண்டு’ கொண்டாட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். பொன் விழாவை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பெண் காவலர்கள் மட்டும் பங்கேற்கும் பாய்மர படகு பயணம் நேற்று தொடங்கியது. சென்னை துறைமுகத்தில் நடந்த தொடக்க விழாவில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது: காவல் துறையில் பெண்களும் பணியாற்றும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 1973-ம்ஆண்டு கொண்டு வந்தார்.
தமிழகத்தில் தற்போது 202 காவல் ஆய்வாளர்கள் உட்பட 23,542 பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். உலக அளவில் இதுபோன்ற படகு சாகச பயணங்களை ஆண்காவலர்கள் பலமுறை மேற்கொண்டுள்ளனர். முதன்முதலாக தமிழகத்தில்தான் பெண் காவலர்கள் 1,000 கி.மீ. தூர படகு சாகச பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துகள். பெண் காவலர்களின் 50-ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் ‘நவரத்தினம்’ எனும் 9 சிறப்பான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதைத் தொடர்ந்து, காவலர்கள் ‘ஜெட் ஸ்கை’ வாகனம் மூலம் நீரில் பல்வேறு சாகசங்களை செய்து காட்டினர்.
பின்னர், பெண் காவலர்களின் படகு சாகச பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாய்மர படகு சாகச பயணத்தில் தமிழக கூடுதல் டிஜிபி (நிர்வாகம்) பாலநாகதேவி, லஞ்ச ஒழிப்பு துறை ஐ.ஜி. பவானீஸ்வரி, மத்திய குற்றப்பிரிவு ஐ.ஜி. மகேஸ்வரி, கடலோர காவல் படைடிஐஜி கயல்விழி ஆகியோர் தலைமையில் 30 பெண் காவலர்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து 4 பாய்மர படகுகளில் புறப்பட்ட இவர்கள், பழவேற்காடு வழியாக நாகப்பட்டினம், கோடியக்கரை வரை சென்று மீண்டும் சென்னை திரும்ப உள்ளனர். 1,000 கி.மீ. தூரத்துக்கான இந்த படகு பயணம் வரும் 17-ம்தேதி நிறைவடையும் என்று தெரிகிறது.
இந்த நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, டிஜிபி சைலேந்திர பாபு, விளையாட்டு துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சீமா அகர்வால்,
சென்னை துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவால், கடலோர காவல்படை ஏடிஜிபி சந்தீப் மிட்டல், ‘ராயல் மெட்ராஸ் படகு கிளப்’ தலைவர் விவேக் மற்றும் இந்திய கடற்படை, கடலோர காவல் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT