Published : 11 Jun 2023 04:13 AM
Last Updated : 11 Jun 2023 04:13 AM

5 ஏக்கர் பரப்பளவில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் வேலூர் டைடல் பார்க் கட்டுமான பணிகள் விறுவிறுப்பு

வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் பகுதியில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் டைடல் பூங்காவின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த படம்: வேலூர் டைடல் பூங்காவின் மாதிரி வரைபடம். படங்கள்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: வேலூர் ‘டைடல் பார்க்’ கட்டுமான பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டில் புதிய நிறுவனங்கள் வருகையால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

வேலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது ‘டைடல் பார்க்’. மாவட்ட இளைஞர்கள் மென்பொருள் துறை வேலை வாய்ப்புக்காக சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்கின்றனர். அதேநேரம், சென்னை பெங்களூரு நகரங்களுக்கு இடையில் உள்ள வேலூரில் ‘டைடல் பார்க்’ அமைவதால் இன்னும் அதிகப்படியான இளைஞர்களுக்கு மென் பொருள் துறையில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்ததும் உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கை விரைவில் நிறைவேற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களில் மென்பொருள் துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் வகையில் ‘டைடல் பார்க்’ அமைக்கப்படும் என்ற அறிவிப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வெளியானது. அதன்படி, வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள 5 ஏக்கர் நிலம் ‘டைடல் பார்க்’ அமைக்க ஒதுக்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆரம்ப கட்ட நிலையில் இருக்கும் ‘டைடல் பார்க்’ பணிகள் தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்ததில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என தெரிவித்தனர்.

5 தளங்களுடன் டைடல் பார்க்: வேலூர் டைடல் பார்க்கின் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.34 கோடி. ‘டைடல் பார்க்’குக்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் 55 ஆயிரத்து 300 சதுரடி பரப்பளவில் 5 தளங்கள் கொண்ட கட்டிடம் அமையவுள்ளது. இதில், தரை தளத்தில் 2 அலுவலகங்கள், அடுத்த 4 தளங்களில் தலா 3 அலுவலகங்கள் இருக்கும் வீதம் கட்டுமான பணிகள் நடைபெறவுள்ளன.

அத்துடன், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், பூங்கா வசதி மற்றும் டைடல் பூங்காவில் வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமையவுள்ளது. கட்டுமான பணிகள் தொடங்கப் பட்டு 10 மாதங்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட வேண்டும் என்பதால் வரும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு கட்டிடம் ‘டைடல் பார்க்’ நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்படும்.

அதன்பிறகு தனியார் மென்பொருள் நிறுவனங்கள் வேலூரில் தொழில் தொடங்க ‘டைடல் பார்க்’ நிர்வாகம் தரப்பில் ஏற்பாடு செய்வார்கள். வேலூர் ‘டைடல் பார்க்’ செயல்பட தொடங்கினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x