Published : 11 Oct 2017 06:24 AM
Last Updated : 11 Oct 2017 06:24 AM

தினமலர் நாளிதழ் பங்குதாரர் ஆர்.ராகவன் காலமானார்

தினமலர் நாளிதழின் பங்குதாரரும் திருச்சி, வேலூர் பதிப்புகளின் ஆசிரியரும், வெளியீட்டாளரும் மற்றும் பதிப்பாளருமான ஆர்.ராகவன்(80) நேற்று காலமானார்.

தினமலர் நாளிதழின் நிறுவனர் ராமசுப்பையரின் 4-வது மகனாக பிறந்தவர் ஆர்.ராகவன். இவருக்கு ஆர்.சுப்பலட்சுமி என்ற மனைவி, தினமலர் இணை ஆசிரியர்களான முனைவர் ஆர்.ராமசுப்பு, ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

இவருக்கு சகோதரிகள் செல்லம்மாள், லட்சுமி, சகோதரர்கள் ஆர்.வெங்கடபதி, ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.லட்சுமிபதி, ஆர்.சத்தியமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.

இவர் தனது 14-ம் வயதில் இருந்தே, பத்திரிகை துறையில் தந்தையின் சில பொறுப்புகளை பகுதி நேரமாக ஏற்றுச் செயலாற்றி வந்தார். 1951-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் தினமலர் தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில் ஆர்.ராகவன் படிப்பை நிறுத்திவிட்டு தந்தைக்குத் துணையாக 1954-ம் ஆண்டு முதல் தினமலர் வரவு, செலவு கணக்கு மற்றும் நிர்வாகத்தை கவனிக்கத் தொடங்கினார். அதன்பின் திருச்சி பதிப்பின் முழு நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றார்.

தினமலர் நாளிதழுக்கு தமிழகம் முழுவதும் விற்பனை பிரிவை உருவாக்கி மக்கள் மத்தியில் நாளிதழை கொண்டு சென்றதில் ஆர்.ராகவனுக்கு முக்கிய பங்குண்டு.

திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வந்த ஆர்.ராகவன், உடல் நலக்குறைவால் நேற்று பகல் ஒரு மணியளவில் காலமானார்.

திருச்சி கன்டோன்மென்ட் பறவைகள் சாலையில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இறுதிச் சடங்குகள் இன்று (அக்.11) மதியம் 3 மணிக்கு திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரையில் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x