Published : 11 Oct 2017 03:50 PM
Last Updated : 11 Oct 2017 03:50 PM

அண்ணாவின் பெயரால் அரசியல் செய்யும் சூழ்நிலை பாஜகவுக்கும் வந்துவிட்டது: ஸ்டாலின் விமர்சனம்

அண்ணா இன்று இருந்திருந்தால் அவர் பாஜகவில் சேர்ந்திருப்பார் என முரளிதரராவ் தெரிவித்திருக்கிறார். அண்ணாவின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் சூழ்நிலை இன்றைக்கு பாஜகவுக்கும் வந்துவிட்டது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''டாஸ்மாக், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அமைச்சர்கள் மாற்றியதாக புகார் எழுந்துள்ளது. மின்சார வாரியம், டாஸ்மாக், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக இதுபோன்ற முறைகேடுகள் ஏராளமாக நடந்துள்ளன. முறையான விசாரணை நடந்தால் அனைத்தும் வெளியே வரும். இந்த ஆட்சி நடக்கும் வரை அதற்கான வாய்ப்பில்லை.

அண்ணாமலை பல்கலை.யில் ஊதியம் வழங்கவில்லை என்று தொடர்ந்து போராட்டம் நடந்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் என பல தரப்பினரும் இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதிமுக ஆட்சி அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அண்ணாமலை பல்கலை.யில் செப்டம்பர் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசு உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். அதேபோல, இப்போதும் பல பிரச்சினைகளில் வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், எதற்கும் பதிலில்லை. டெங்கு பிரச்னையில் மாநில அரசின் அலட்சியம் குறித்து இன்றைக்கு பட்டவர்த்தனமாக சுட்டிக்காட்டி இருக்கிறது. எனவே, முழுமையான விவரங்களுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் தான் உண்மைகள் வெளி வரும்.

அண்ணா இன்று இருந்திருந்தால் அவர் பாஜகவில் சேர்ந்திருப்பார் என முரளிதரராவ் தெரிவித்திருக்கிறார். அண்ணாவின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் சூழ்நிலை இன்றைக்கு பாஜகவுக்கும் வந்துவிட்டது. அவர்களின் மனதில் அண்ணாவை வைத்து, இன்றைக்கு நினைவுபடுத்தியதற்காக திமுகவின் சார்பில் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், கடந்த மூன்றரை ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் உள்ள பாஜக ஆட்சி எதையுமே செய்யவில்லை. இந்த ஆட்சியால் மக்களுக்கு எந்தவொரு பயனுமே கிடைக்கவில்லை. எனவேதான், அதையெல்லாம் திசை திருப்பும் வகையில் இப்படிப்பட்ட பிரசாரத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குட்கா விவகாரம் தொடர்பான வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பெயர்கள் இதுவரை இடம்பெறவில்லை. அதனால் தான் குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மூலமாக நாங்கள் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளோம். அதேபோல, அமைச்சர், டிஜிபிக்கள் ஆகிய 3 பேரின் பெயர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து மூத்த வழக்கறிஞர் வில்சன் நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கிறார். விரைவில் அந்த வழக்கும் தொடங்க உள்ளது. எனவே, நீதிமன்றத்தில் உரிய நியாயம் கிடைக்கும்.

திமுகவை ஊழல் கட்சி என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து இருக்கிறார். எதற்கும் பயனற்ற, உதவாத வகையில் அவர் அளித்து வரும் பேட்டிகளை எல்லாம் தொடர்ந்து நானும் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். நான் கேட்கும் ஒரே கேள்வி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 89 கோடி ரூபாய் விநியோகம் செய்த ஆவணங்கள் கிடைக்கப்பெற்று, அது விசாரணையில் இருக்கிறது. அதேபோல, குட்கா விற்பனையில் ஒரு அமைச்சரும், இரு காவல்துறை உயரதிகாரிகளும் மாமூல் வாங்கியதற்கான ஆதாரங்கள் வருமான வரித்துறையில் கிடைத்துள்ளன. அந்த வழக்கும் நடந்து வருகிறது. அதுமட்டுமல்ல, இந்த அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையிலும் அவர்கள் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் உரிய விளக்கத்தை அவர்கள் அளித்துவிட்டு, அதன்பிறகு கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியும்.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளபோது, அரசின் வருவாயை உயர்த்த மதுபானங்களின் விலையை 12 ரூபாய் வரை உயர்த்த அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. படிப்படியாக மதுபானக் கடைகளை மூடுவோம், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்று சொன்னவர்கள் இன்றைக்கு இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிட்டு இருப்பதில் இருந்து, எப்படிப்பட்ட முரண்பட்ட ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் நானும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், திமுக நிர்வாகிகளும் டெங்கு பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கும், இந்த அரசாங்கத்துக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆங்காங்கு இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, டெங்கு பாதிப்புகளை எல்லா வகையிலும் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறோம்'' என்று ஸ்டாலின் கூறினார்.   

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x