Published : 28 Oct 2017 08:36 AM
Last Updated : 28 Oct 2017 08:36 AM

மத்திய அரசு குடியிருப்பை தனியாருக்கு வாடகைக்கு விட்டு மோசடி: அதிகாரிகள் உட்பட 35 பேரை கைது செய்ய சிபிஐ திட்டம்

மத்திய அரசு குடியிருப்பில் உள்ள வீடுகளை சட்ட விரோதமாக தனியாருக்கு வாடகைக்கு விட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் 35 பேர் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.

கே.கே.நகரில் மத்திய பொதுப்பணித் துறை ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் மட்டுமே வசிக்க முடியும்.

இந்நிலையில் இந்தக் குடியிருப்பில் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியாத வெளி நபர்கள், இங்கு வசிப்பதாக சென்னை சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகார்கள் வந்தன. அந்த புகார்களின் அடிப்படையில் சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

விசாரணையில், அந்த குடியிருப்பில் மொத்தம் 16 வீடுகளில் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியாத வெளி நபர்கள் வசிப்பதும், மேலும் அவர்கள் அந்த வீட்டு முகவரியைப் பயன்படுத்தி ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, சமையல் காஸ் இணைப்பு பெற்றிருப்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்ததில், 16 வீடுகளை அரசிடமிருந்து ஒதுக்கீடு மூலம் பெற்ற மத்திய அரசு அதிகாரிகள், அந்த வீடுகளை வெளிநபர்களுக்கு குறைந்த கட்டணத்துக்கு வாடகைக்கு விட்டிருப்பதும், அதற்கு அந்தக் குடியிருப்பை பராமரிக்கும் ஊழியர் ஒருவர் உடந்தையாக இருந்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், சட்ட விரோதமாக வீட்டை வாடகைக்கு விட்ட அதிகாரிகள், துணைபோன அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என 35 பேர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.

விரைவில் கைது நடவடிக்கை இருக்கும் என சிபிஐ அதிகாரி கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x