மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகை - இபிஎஸ், ஓபிஎஸ்ஸை சந்திக்க திட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகை - இபிஎஸ், ஓபிஎஸ்ஸை சந்திக்க திட்டம்
Updated on
1 min read

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு சென்னை வருகிறார். கூட்டணி கட்சி தலைவர்களான பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டுகால மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் மே 30-ம் தேதி முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை பாஜகநடத்தி வருகிறது.

தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கும் பொதுக் கூட்டம் ஜூன் 8-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அமித் ஷாவின் பயண தேதி மாற்றப்பட்டு, அவர் நாளை (ஜூன் 11) தமிழகம் வருவதாக இருந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் தேதி மாற்றப்பட்டு, அவர் இன்று (ஜூன் 10) இரவே சென்னைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு இன்று இரவு 9 மணி அளவில் சென்னை வரும் அமித் ஷா, எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.

அங்கு கூட்டணி கட்சித் தலைவர்களான பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, சென்னை கோவிலம்பாக்கத்தில் நாளை காலை 11 மணி அளவில் பாஜக நிர்வாகிகள், பொறுப்பாளர்களை சந்தித்து அமித் ஷா ஆலோசனை நடத்துகிறார். அப்போது, 2024 மக்களவை தேர்தல் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆலோசனைகள், அறிவுறுத்தல்களை பாஜகவினருக்கு அவர் வழங்குவார் என தெரிகிறது.

பிற்பகல் 2 மணி அளவில் காரில் சென்னை விமான நிலையம் செல்லும் அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டரில் வேலூர் சென்று, கந்தனேரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in