

சென்னை: மருத்துவ இடங்களுக்கு மாநில அரசே கலந்தாய்வு நடத்தும் உரிமையை மீட்ட தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மு.அகிலன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்த கல்வி ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை மத்திய அரசே நடத்தும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அறிக்கையை திரும்ப பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, சுகாதாரத் துறை சார்பில் மாநில அரசின் பிரதிநிதி டெல்லி சென்று மாநில அரசே கலந்தாய்வு நடத்தும் என தமிழக அரசின் விளக்கத்தை அளித்து வந்தார். தொடர்ந்து, அந்தந்த மாநில அரசுகளே கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
மாநில அரசின் உரிமையைமீட்கும் வகையிலான இந்த நடவடிக்கையை முன்னெடுத்த தமிழக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர், செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர், துணை இயக்குநர், தேர்வுக் குழு செயலர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.