

சென்னை: சென்னையில் காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை துறை ரீதியான குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் ‘உங்கள் துறையின் முதல்வர்’ திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக கடந்த 2021-ம் ஆண்டு அக்.2-ம் தேதி குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து அதே ஆண்டு டிசம்பர் மாதத்திலும், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு மொத்தம் 3,717 மனுக்கள் பெறப்பட்டிருந்தன. இவ்வாறு பெறப்பட்ட அனைத்து மனுக்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, காவலர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமை வகித்தார். தொடர்ந்து முகாமில், 350-க்கும் மேற்பட்ட காவல் அலுவலர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். பெண்காவலர்கள் பலர் குழந்தைகளுடன் வந்திருந்தனர்.
இந்த மனுக்களில் பணிமாறுதல், ஊதிய முரண்பாடுகளைக் களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், காவலர் சேம நல நிதியிலிருந்து மருத்துவ உதவித் தொகை கோருதல் உள்ளிட்ட துறை ரீதியான மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதேபோல இவற்றில் மிக முக்கியமானவற்றுக்குத் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.
ஏற்கெனவே குறைகள் தொடர்பாகத் தன்னை நேரில் சந்தித்து மனு கொடுக்கலாம் என்றும், ஆணையரை அலுவலகத்தில் சந்திக்க எந்த தடையும் இல்லை என்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், நடப்பாண்டில் காவல் ஆணையரை, அவருடைய அலுவலகத்தில் நேரில் சந்தித்து இதுவரை வழங்கப்பட்ட மனுக்களில் 634 மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 196 மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இம்முகாமில், கூடுதல் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், காவல் இணை ஆணையர் சாமூண்டீஸ்வரி, துணை ஆணையர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன், வி.ஆர்.சீனிவாசன், சவுந்தரராஜன், கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.