பேசின்பிரிட்ஜ் யார்டில் ஜனசதாப்தி ரயில் தடம் புரண்டது

பேசின்பிரிட்ஜ் யார்டில் ஜனசதாப்தி ரயில் தடம் புரண்டது
Updated on
1 min read

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து பேசின் பிரிட்ஜ் யார்டுக்கு சென்ற ஜனசதாப்தி விரைவு ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏதும் இல்லை.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஜனசதாப்தி விரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு 10.40 மணிக்கு வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு இரவு 12 மணியளவில் ரயில் பெட்டிகளைத் தூய்மைப்படுத்துவதற்காக பேசின் பிரிட்ஜ் யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போது, திடீரென ரயிலின் இன்ஜினை ஒட்டிய 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டன. இதைக் கண்ட ஓட்டுநர்கள் ரயிலை உடனடியாக நிறுத்தினர்.

தகவல் அறிந்து ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடம் புரண்ட பெட்டிகளை மீண்டும் ரயிலுடன் இணைத்தனர். சுமார் 2 மணி நேர பணிக்குப் பிறகு ரயில் பெட்டிகள் சீரமைக்கப்பட்டு யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டன.

ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்தவிபத்து குறித்து ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸார், ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in