

சென்னை: குடியரசு தலைவர் நேரம் ஒதுக்காததால் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வரே திறக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டும் பணிகளுக்கு 2022-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தரைதளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 51 ஆயிரத்து 429 சதுர மீட்டர்பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையில், இதயம், நுரையீல்,நரம்பியல், சிறுநீரகவியல், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு துறைகளுடனும், 1,000 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஏ - பிளாக்கில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு, பி - பிளாக்கில் அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, சி - பிளாக்கில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை ஜூன் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. இதற்காக அரசின் சார்பில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கும் பணி, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
குடியரசுத் தலைவர் வெளிநாடு பயணத்தால், மருத்துவமனை திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையை வரும் 15-ம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், குடியரசு தலைவர் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “குடியரசு தலைவரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் எந்த பதிலும் வரவில்லை. அவர் வராவிட்டாலும் 15-ம் தேதி கண்டிப்பாக மருத்துவமனை திறப்பு விழா நடைபெறும். தமிழக முதல்வர் மருத்துவமனையை திறந்து வைப்பார்'' என்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்காமல்புறக்கணித்தன. அதேநேரம் பிஹார் மாநிலம் பாட்னாவில் வரும் 23-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். இதன் காரணமாக குடியரசுத் தலைவர் மருத்துவமனை திறப்புக்கான நேரத்தை ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது.