Published : 10 Jun 2023 06:09 AM
Last Updated : 10 Jun 2023 06:09 AM
சென்னை: வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், நாய்களின் இனப்பெருக்கம் தொடர்பான விதிகளை 8 வாரங்களில் வகுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசின் அந்நிய வர்த்தக துறை தலைமை இயக்குநர் உள்நாட்டு நாய் இனங்களைப் பாதுகாக்க வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்ய தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட்டு இருந்தார்.
இதை எதிர்த்து இந்திய கென்னல் கிளப், மெட்ராஸ் கெனைன் கிளப் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அதில், வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதால் உள்நாட்டு நாய்கள் பாதிக்கப்படும் எனக்கூறுவதற்கு எந்த அறிவியல் பூர்வமான ஆய்வோ, புள்ளி விவரங்களோ இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நாய்களை தனிமைப்படுத்தி, பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே அனுமதிக்கப்படுவதால் உள்நாட்டு நாய்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
இந்தியநாய் இனங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்த நீதிபதி, இதற்காக வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்துதான் அந்த இலக்கை எட்டமுடியும் என்பதில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். அதேசமயம் வர்த்தக ரீதியில்வெளிநாடுகளில் இருந்து நாய்கள் இறக்குமதி செய்யப்படுவதை முறைப்படுத்தலாம் எனக்கூறி மத்திய அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பாக தமிழ் விலங்குகள் நல வாரியம், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தமிழக அரசு அளித்த விளக்கத்தை ஏற்ற நீதிபதி அனிதா சுமந்த், நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான விதிகளை 8 வாரத்தில் வகுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆக. 5-ம் தேதி தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT