பேருந்து பயணிகளை வதைக்கும் பண்ருட்டி நகராட்சி

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் நின்றபடி பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்.
பண்ருட்டி பேருந்து நிலையத்தில் நின்றபடி பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்.
Updated on
2 min read

விருத்தாசலம்: பண்ருட்டி பேருந்து நிலையத்தில், பயணிகள் அமருவதற்கான போதிய இருக்கைகள் அமைக்கப்படாததாலும், போதுமான பேருந்து நிழற்குடை அமைக்கப்படாததாலும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை என்ஹெச் 45 சி சாலை மார்க்கத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி உலகளந்த பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு ரூ.7ஆயிரத்துக்கு குத்தகை அடிப்படையில் பேருந்து நிலையத்துக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையப் பகுதியில் சுமார் 100 கடைகள் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு, வருவாய் ஈட்டப்படுகிறது. இப்பேருந்து நிலையத்தில் தினந்தோறும் 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. மாவட்டத் தலைநகர்களான கடலூர், விழுப்புரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் என தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பயணிகளின் நலன்கருதி அமைக்கப்பட வேண்டிய இருக்கைகள் அமைக்கப்படவில்லை. பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் நின்று கொண்டே இருக்க வேண்டியது உள்ளது. வயதானவர்கள் நிற்க முடியாமல் கால் கடுக்க காத்திருக்கின்றனர். சோர்ந்து போய் தரையில் அமர்ந்தாலும், சுட்டெரிக்கும் வெயில் அவர்களை பதம் பார்க்கிறது.

மேலும், பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போதுமான பயணிகள் காத்திருக்க நிழற்குடை அமைக்கப்பட வேண்டும். அதுவும் இல்லை. ‘இந்த கொதிக்கும் கோடை வெயிலில், பண்ருட்டி பஸ் ஸ்டாண்டில் பேருந்துக்காக கால் கடுக்க காத்திருப்பது பெரும் கொடுமை’ என்று சுற்று வட்டார மக்கள் வாய் விட்டு புலம்பும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. சமயத்தில், போதிய நிழல் வசதி இல்லாததால், அவர்கள் அப்பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்தை சூழ்ந்து அமர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்தக் கொடுமையைத் தாண்டி பயணிகளுக்காக கட்டப்பட்ட இலவசக் கழிப்பறைபூட்டப்பட்டு கிடக்கிறது. கட்டணக் கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை இரவு நேரங்களில் மதுபானகூடமாக மாறி விடுவதாக பேருந்து நிலையத்தை சுற்றி இருக்கும் கடைக்காரர்களே குற்றம்சாட்டுகின்றனர். சிற்றுண்டிகள் விற்பனை செய்வோர் பேருந்தினுள் ஏறி, பயணிகளை ஏற இறங்க விடாமல் சிரமத்தை ஏற்படுத்தும் தொல்லையும் பிற பேருந்து நிலையத்தை விட இங்கு சற்று அதிகமாக உள்ளதாக பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு குறைபாடுகளுடன் செயல்படும் பேருந்து நிலையத்தை பராமரிக்கும் பண்ருட்டி நகராட்சி நிர்வாகமோ, பேருந்து நிலையத்தின் கடை வாடகை, பேருந்து நுழைவு கட்டணம் மற்றும் கழிப்பறை குத்தகை என ஆண்டுக்கு ரூ. 30 லட்சம் வருவாய் ஈட்டுகிறது. ஆனால், இந்த பேருந்து நிலையத்துக்காக ஆண்டு குத்தகையாக ரூ.7 ஆயிரம் மட்டுமே அளித்துவருகிறது. மீதம் உள்ள பணத்தில் பயணிகளின் அடிப்படைத் தேவையான இருக்கை, நிழற்குடை உள்ளிட்ட வசதிகளை செய்து தரலாம்.

“கழிப்பறை கட்டணக் குளறுபடிகள் மாவட்டம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் காணப்படுகிறது. பண்ருட்டி பேருந்து நிலையத்தைப் பொறுத்தவரை சிற்றுண்டி வியாபாரம் என்ற பெயரில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் விற்பனையாளர்களின் செயல்பாடுகள் உள்ளன. இவற்றை ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் கடலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு நிர்வாகி அழகுராஜ்.

இதுகுறித்து பண்ருட்டி நகராட்சி ஆணையர் மகேஸ்வரியிடம் கேட்டபோது, “இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பதோடு, கூடுதல் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள மற்ற பிரச்சினைகளும் சரிசெய்யப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in