

மதுரை: ‘‘இளைஞர்களே.. விலையுர்ந்த பைக்குகள் உங்களுக்கு சொந்தம்தான். அதற்காக விதியை மீறி ஒன்றுக்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக பயணிக்கும்போது, தவறி விழுந்தால் நீங்கள் மட்டுமின்றி எங்களது உயிருக்கும் ஆபத்து ஏற்படுமே.’’ என பிரதான சாலைகளில் பயணிக்கும் மதுரைவாசிகள் முணுமுணுக்கும் வாசகம் இது.
அந்த அளவுக்கு மதுரை நகர் சாலைகளில் அதிவேக பைக்குகளில் இளைஞர்கள் சாகசம் புரிவது தொடர்கிறது. இந்த சாகச நிகழ்வை இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், பேஸ் புக் போன்ற சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு மகிழ்கின்றனர்.
இதுபோன்ற சாகசங்களை பார்க்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அதிவேக பைக்குகள் மீது மோகம் கொண்டு, தங்கள் பெற்றோரை நச்சரித்து விலை உயர்ந்த பைக்குகளை வாங்குகின்றனர்.
பெற்றோரும் வேறு வழியின்றி மகன் கேட்டும் பைக்குகளை வாங்கித் தரும் நெருக்கடிக்கு தள்ளப்படுகின்றனர். அவர்கள் ஏதாவது விபத்துகளில் சிக்கும்போதுதான் நிலைமையை உணர்ந்து வருந்துகின்றனர்.
மதுரை நகரில் குறிப்பாக கே.கே.நகர், அண்ணாநகர், சிவகங்கை, ராமநாதபுரம், வைகை வடக்கு, தெற்கு கரை சாலைகள் நத்தம் மேம்பாலம், பைபாஸ் சாலைகளில் பைக்குகளில் அசுர வேகத்தில் செல்கின்றனர். இதில் பின்னால் அமர்ந்து செல்வோரும் வெறிக் கூச்சலிட்டபடி செல்கின்றனர். இவர்களின் அட்டகாசத்தால் சாலைகளில் செல்வோர் அச்சத்துடன் பயணிக்க வேண்டி உள்ளது.
மேலும் சர்க்கஸ் போன்று முன்பக்க வீல்களை அலாக்காக தூக்கி சாகசம் புரிகின்றனர். மற்றோரு புரம் சவ ஊர்வலம், மது அருந்தி விட்டு செல்வோரும் இருசக்கர வாகனங்களில் தாறுமாறாக செல்கின்றனர்.
இவர்களால் சாலைகளில் செல்லும் அப்பாவி பாதசாரிகள் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் பரிதாபமும் நிகழ்ந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் பைக் ரேஸ் சாகசம் தொடர்பாக நூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், மதுரை சாலைகளில் பைக்கில் அசுர வேகத்தில் செல்லும் இளைஞர்களை கட்டுப்படுத்த காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் கூறியதாவது: மதுரையில் முக்கிய சாலைகளில் பைக் ரேஸ், அதிவேகம், மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவோரை தடுக்க சிறப்பு ரோந்து படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, நத்தம் மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் இரவு 10 மணி வரை போலீஸார் வாகனங்களில் ரோந்து செல்கின்றனர். நெடுஞ்சாலை ரோந்து போலீஸாரும் கண்காணிக்கின்றனர். சிசிடிவி கேமராக்கள் மூலமும் விதி மீறும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆபத்தை ஏற்படுத்தும் பயணம் என்ற வகையில் ரூ. 1000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.‘ பைக் ரேஸ் ’ தொடர்பான சமூக வலைதள வீடியோ பகிர்வை கண்காணித்து சட்டம், ஒழுங்கு போலீஸார் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர்.
இதுகுறித்து பெற்றோருக்கும் விழிப்புணர்வு வேண்டும். தங்கள் பிள்ளைகளுக்கு அதிக குதிரை சக்தி கொண்ட பைக்குகளை வாங்கி தருவதை தவிர்க்க வேண்டும். பெற்றோர் சிரமத்தை பிள்ளைகளும் உணர வேண்டும்.
முக்கிய சாலைகளில் பைக் ரேஸை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கையை தீவிரப்படுத்தினால் இளைஞர்கள் பதற்றத்தில் எங்காவது ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கினால் அதற்கும் காவல்துறையினரே பதில் அளிக்க வேண்டி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.