பேரவைத் தலைவர் சர்வாதிகாரமாக நடக்கிறார்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பேரவைத் தலைவர் சர்வாதிகாரமாக நடக்கிறார்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
Updated on
1 min read

பேரவை தலைவர் சர்வாதிகாரத் தன்மையுடன் நடந்து கொள்கிறார் என்று திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வியாழக்கிழமை கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பேரவைக்கு வெளியே அமைச்சர் வைத்திலிங்கம், பேரவை தலைவர் தனபால் ஆகியோரைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

அதிமுக பெண் எம்எல்ஏ மானியக் கோரிக்கை பற்றி பேசாமல் திமுக, தேமுதிக ஆகிய எதிர்க்கட்சியினரை கொச்சைப் படுத்தி பேசினார். அதற்கு எங்கள் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண் எம்எல்ஏ இவ்வாறு பேசுவது நியாயமா என்று துரைமுருகன் கேட்டார். ஆனால் அமைச்சர் வைத்தி லிங்கம், உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்.

இந்த அவையில் எதிர்க்கட்சி களை மிக மோசமாக விமர்சிக்கின்றனர். எங்கள் கட்சி உறுப்பினர் பேசி யதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கச் சொல்கிறார்கள்.

ஆனால் அதிமுக உறுப்பினர் பேசுவது அவைக் குறிப்பில் இருக்கட்டும் என்றால் எந்த வகையில் நியாயம்? இதைக் கேட்டதற்கு எங்களை வெளியேற்றி விட்டனர். பேரவைத் தலைவர் சர்வாதிகாரத் தன்மையுடன் நடந்து கொள்கிறார். இது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in