Published : 08 Oct 2017 08:57 AM
Last Updated : 08 Oct 2017 08:57 AM

தீபாவளியை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா? - பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு இந்த ஆண்டும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா? என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் 18-ம் தேதி புதன்கிழமையன்று வருகிறது. இந்தப் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். வழக்கமாகச் செல்லும் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது. டிக்கெட் கிடைக்காத மக்கள் தற்போது அரசு பேருந்துகளையே நம்பியுள்ளனர்.

பெரும் ஏமாற்றம்

தீபாவளிப் பண்டிகையின்போது, சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஆண்டுதோறும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ஆனால், வரும் தீபாவளிப் பண்டிகையையொட்டி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்குவது பற்றி இதுவரையில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது, பொதுமக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் சிலர் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘தீபாவளிப் பண்டிகையின்போது மக்களின் வசதிக்காக முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும். இந்தச் சிறப்பு ரயில்கள் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால், டிக்கெட் கிடைக்காத மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்’’ என்றனர்.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வழக்கமாக தீபாவளிப் பண்டிகையின்போது, சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 2015-ம் ஆண்டு 4 சிறப்பு ரயில்களும், 2016-ம் ஆண்டு 3 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு தீபாவளிக்கு இதுவரையில் எந்த அறிவிப்பும் வரவில்லை. இருப்பினும், ஒரு சில நாட்களில் ஏதாவது அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x