Published : 18 Oct 2017 07:50 AM
Last Updated : 18 Oct 2017 07:50 AM

வழக்கறிஞர்கள் முன்பாக நடைபெறும் திருமணங்கள் சட்டப்படி செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் வைத்து வழக்கறிஞர்களின் முன்னிலையில் நடைபெறும் திருமணங்களும் சட்டப்படி செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளம்பெண் ஒருவர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் வைத்து என்னிடம் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர். அதை வைத்து ஒருவருடன் எனக்கு பதிவுத்திருமணம் நடந்துள்ளதாகக் கூறி போலியாக ஆவணங்களை தயாரித்துள்ளனர். எனவே எனக்கும் அந்த சம்பந்தப்பட்ட நபருக்கும் நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கின் குறுக்கு விசாரணையின்போது வழக்குத் தொடர்ந்த அந்த பெண், ‘வழக்கறிஞர் அலுவலகத்தில் தனது விருப்பப்படி தான் அந்த நபருடன் திருமணம் நடந்தது’ என முன்னுக்குப்பின் முரணாக தெரிவித்தார்.

இதனால் அப்பெண் தொடர்ந்த வழக்கை கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.செல்வம் மற்றும் பொன்.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அப்பெண்ணின் கணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்து திருமணச் சட்டத்தின்படி ஒரு ஆணும், பெண்ணும் இந்து பாரம்பரியத்தின் அடிப்படையில் 2 நபர்களின் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டாலும் அது சட்டப்படி செல்லும். அந்த 2 நபர்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது வேறு சிலராக இருக்கலாம் என்று சட்டம் சொல்கிறது. அந்த வேறு சிலரில் வழக்கறிஞர்களும் அடக்கம். அப்படியிருக்கும்போது வழக்கறிஞர் அலுவலகத்தில் வழக்கறிஞர் முன்னிலையில் நடைபெற்ற திருமணம் செல்லாது என மனுதாரர் கோர முடியாது’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கில் வழக்கறிஞர் அலுவலகத்தில் வைத்து வழக்கறிஞர்கள் முன்னிலையில் மனுதாரருக்கும், எதிர் மனுதாரருக்கும் திருமணம் நடந்துள்ளது.

அதனடிப்படையில் பின்னர் அந்த திருமணம் சட்டப்படி பதிவும் செய்யப்பட்டுள்ளது. எனவே மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. திருமணம் நடந்ததாக வழக்கறிஞர் பதிவுத்துறை அலுவலகத்துக்கு கொடுத்த கடிதமும் சட்டப்படி செல்லும்’’ என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x