Published : 25 Oct 2017 03:15 PM
Last Updated : 25 Oct 2017 03:15 PM

நெல்லை கந்துவட்டி கொடூரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கந்துவட்டி கொடுமைக்கு நெல்லை மாவட்டத்தில் ஒரு குடும்பமே பலியான சம்பவத்தில் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கந்துவட்டி கொடுமை தாள முடியாததால் நெல்லை மாவட்டம் காசிதர்மத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து அவரது குடும்பத்துடன் நேற்றுமுன் தினம் (அக்.23) தீக்குளித்தார். ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அவர் குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில், இசக்கிமுத்துவின் மனைவி, குழந்தைகள் சம்பவ தினத்தன்றே உயிரிழந்துவிட உயிருக்குப் போராடிய இசக்கிமுத்துவும் இன்று (அக்.25) பலியானார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை டிஜிபி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், நெல்லை காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் 4 வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பொறுப்பின்மையையே உணர்த்துகிறது..

"நெல்லை தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இச்செய்திகளை வைத்துப் பார்க்கின்றபோது இவ்விவகாரத்தில் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் பொறுப்பின்மை வெளிப்படையாகத் தெரிகிறது" என தேசிய மனித உரிமைகள் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், "மாநிலத்தில் பரவலாக இதுபோன்று கந்துவட்டி கொடுமைகள் நடைபெறுவதையும் இச்சம்பவம் அம்பலப்படுத்தியிருக்கிறது. கந்துவட்டி கொடுமையைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவலர்கள் பணத்தை வட்டிக்கு விடுபவர்களுடன்  கைகோத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களையே துன்புறுத்துகின்றனர்"

இவ்வாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x