Published : 17 Oct 2017 10:18 AM
Last Updated : 17 Oct 2017 10:18 AM

கொள்ளை நோயால் பாதித்த மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை

தமிழகத்தை கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 218-வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு வைகோ நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் மானாவாரி விவசாயிகள் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளை தமிழக அரசு வஞ்சிக்கக் கூடாது.

பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி, வரும் 31-ம் தேதி கோவில்பட்டியில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வருவதற்கு முன்பே, தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் வசதிகள் இல்லை.

டெங்கு உயிரிழப்புகளை மறைப்பதால் தமிழக அரசு கவிழ்ந்து விடப்போவதில்லை. தமிழகத்தை கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக அறிவிக்க வேண்டும். இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பல்வேறு நிதியுதவி கிடைக்கும்.

தமிழகத்தில் நியாயத்துக்காக போராடுபவர்களை அடக்க நினைக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x