Published : 07 Oct 2017 08:03 AM
Last Updated : 07 Oct 2017 08:03 AM

வித்யாசாகர் ராவ் செய்த தவறை புதிய ஆளுநர் செய்ய மாட்டார்: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

வித்யாசாகர் ராவ் செய்த தவறை புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்ய மாட்டார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நேற்று பதவியேற்றார். பதவியேற்பு விழாவுக்கு 30 நிமிடம் முன்னதாகவே, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வந்தனர். பேரவைத் தலைவர் தனபால் உள்ளிட்டோர் வந்தபோது, மு.க. ஸ்டாலினிடம் கைகுலுக்கி பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.

பதவியேற்பு விழா முடிந்ததும் முதலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை மேடைக்கு அழைத்து, ஆளுநரிடம் முதல்வர் பழனிசாமி அறிமுகப்படுத்தினார். இதற்கிடையில், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் சென்றனர்.

அடுத்ததாக, உயர் நீதிமன்ற நீதிபதிகளை ஆளுநரின் செயலர் ரமேஷ் சந்த் மீனா அழைத்தார்.அப்போது எழுந்து வந்த மு.க. ஸ்டாலின், ஆளுநரின் செயலரிடம், ‘நீங்கள் எங்களை விழாவுக்கு அழைத்துவிட்டு வாழ்த்து கூற அழைக்காதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதன்பின்னர் ஸ்டாலின் மேடைக்கு சென்று ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.

மரபு மீறப்பட்டுள்ளது

அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

தமிழகத்தின் புதிய ஆளுநரிடம் திமுக எதை எதிர்பார்க்கிறது?

‘சட்டம்-ஒழுங்கை அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு பாதுகாப்பேன். எந்தவித அரசியல் தலையீடுகளும் இல்லாத வகையில் கடமையை ஆற்றுவேன்’ என்று அவரே கூறியுள்ளார். அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். ஏற்கெனவே தமிழக ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் செய்த தவறை இவர் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆளுநர் பதவியேற்பில் மரபு முறையாக பின்பற்றப்படவில்லையா?

பதவியேற்ற பிறகு ஆளுநருக்கு முதல்வரும் அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அவர் களுக்குப் பின், அரசு கொறடா வாழ்த்து தெரிவித்தார். நியாயமாக அமைச்சர்களுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து சொல்வதுதான் மரபு. அதன்படி, ஆளுநருக்கு வாழ்த்து சொல்ல நான் சென்றேன்.

அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர், ‘நீதிபதிகள் வாழ்த்து சொன்ன பின்பே நீங்கள் வரவேண்டும்’ என்றார். அதற்கு நான் ‘அப்படியென்றால் நீதிபதி கள் வாழ்த்து சொன்ன பிறகுதானே, அமைச்சர்கள் வாழ்த்து சொல்லியிருக்க வேண்டும். அதுதானே மரபு’ என்றேன். அந்த மரபு இங்கு மீறப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் என்பதுதான் மரபு என வாதிட்டேன். அதன்பின் வேறு வழியில்லாமல் என்னை வாழ்த்த அனுமதித்தனர்.

வாக்கி - டாக்கி ஊழல் குறித்து ஆளுநரிடம் முறையிடுவீர்களா?

இது தொடர்பாக நான் வெளியிட்ட அறிக்கைக்கு என்ன ரியாக் ஷன் இருக்கிறது என்று பார்ப்போம். தேவையென்றால் ஆளுநரை நேரில் சந்தித்து இந்த பிரச்சினை குறித்து முறையிடுவோம்.

சசிகலாவின் கணவருக்கு உறுப்பு தானம் பெறப்பட்டது குறித்த சர்ச்சை எழுந்துள்ளதே?

உறுப்பு தானம் செய்த இளைஞரின் குடும்பத்தினரே இதை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று வேதனையுடன் கூறியுள்ளனர். எனவே, இது குறித்து விமர்சிக்க விரும்பவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x