

காரைக்குடி: தமிழகத்தில் கள், மின் லாட்டரி விற்பனையை தொடங்க வேண்டும் என அரசுக்கு கார்த்தி சிதம்பரம் எம்பி யோசனை தெரிவித்துள்ளார்.
அவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவை தேர்தலில் 39 இடங்களிலும் காங்., திமுக கூட்டணி வெற்றிபெறும். கடந்த 2019-ம் ஆண்டில் தோற்ற ஒரு இடத்தையும், இந்தமுறை கைப்பற்றுவோம். எங்களது கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளது. தமிழக மின்துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் சுமை உள்ளது. இதை குறைக்க தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
கடன் சுமையை குறைக்க மின் லாட்டரியை கொண்டு வரலாம். லாட்டரியில் பரிசு தொகை அறிவிக்காமல், வெற்றி பெற்றவருக்கு இலவச மின்சாரம், மானியம் கொடுக்கலாம். அரசு மேற்பார்வையுடன் கள் விற்பனையை நடத்த வேண்டும். மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு சட்டரீதியான பாதுகாப்பு உண்டு. அனைத்து அரசியல் கட்சிகளும் அரசுக்கு துணை நிற்கும். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 888 இருக்கைகள் இருப்பதற்கு காரணம் தெரியவில்லை. பிரதமரின் ராசி எண் 8 என்பதால் 888 இருக்கைகள் வைத்திருக்கலாம்.
மக்கள்தொகை அடிப்படையில் எம்பிகள் எண்ணிக்கையை அதிகரித்தால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும். தென்மாநிலங்களில் பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் குறையவில்லை. நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களில் பிரதிநிதித்துவம் குறைவு. ஆனால் தென்மாநிலங்களில் அதிகமாக வரி வசூலித்துவிட்டு, அதற்குரிய பிரதிநிதித்துவம் கொடுக்காமல் இருப்பதை ஏற்க முடியாது. பாஜக அரசிடம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் திறமையும், மனமும் கிடையாது. ஒடிசா ரயில் விபத்துக்கு ஓட்டுநர் காரணம் என்று கூறுவது அபத்தம். இவ்வாறு அவர் கூறினார்.