Published : 09 Jun 2023 07:37 PM
Last Updated : 09 Jun 2023 07:37 PM

தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் அதிகம்: முதல்வர் ஸ்டாலின்

திருச்சி நந்தியாறு வடிகாலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

திருச்சி: "வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தில் மட்டும் 13 பைசாவிலிருந்து 21 பைசா வரை உயர்வு இருக்கும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறோம், அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. மற்ற மாநிலங்களில் இதை விட அதிகம்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், வணிக (Commercial) மின் கட்டணம் உயர்வினால் வணிகம் பாதிக்கப்படும் என்று ஒரு கருத்து இருக்கிறது, அதைக் குறைப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "அதுவும் ஒரே ஒரு பத்திரிகையில்தான் அதை பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லோரும் அதைப் புரிந்துகொண்டார்கள். திட்டமிட்டு ஒரு பொய்ப் பிரச்சாரம்.

வீட்டு இணைப்பைப் பொறுத்தவரை, அவர்களுக்கு மின் கட்டணத்தை எந்தக் காரணம் கொண்டும் உயர்த்த மாட்டோம் என்று உறுதியாக சொல்லிவிட்டோம். ஆனாலும் ஏற்கெனவே அதே அறிவிக்கைதான் வந்திருக்கிறது. உங்களுக்குத் தெரியும், பார்த்திருப்பீர்கள். புள்ளிவிவரத்துடன் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

வீட்டு இணைப்பிற்கு எந்தவிதமான கட்டண உயர்வும் கிடையாது, அனைத்து இலவச இணைப்புகளும் தொடரும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறோம். அதேபோல வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் என்பதும் தொடரும். கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கு அளிக்கப்படக்கூடிய இலவச மின்சார சலுகைகளும் அப்படியே தொடரப் போகிறது. அதில் எந்தவித மாற்றமும் கிடையாது.

ஒன்றிய அரசின் விதிமுறைப்படி பார்த்தீர்கள் என்றால், 4.7 விழுக்காடு கட்டணம் அதிகரிக்க வேண்டும். ஆனால், 2.18 விழுக்காடாக அதனை குறைத்து, அந்தத் தொகையையும் மானியமாக தமிழக அரசு ஏற்றுக்கொண்டு மின் வாரியத்துக்கு தருவதற்காக அரசு உத்தரவிட்டிருக்கிறது. எனவே, வீட்டு இணைப்புகளை பொறுத்தவரைக்கும் எந்தவிதமான கட்டண உயர்வும் நிச்சயமாக இருக்காது.

வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் அதுவும் 13 பைசாவிலிருந்து 21 பைசா வரை உயர்வு இருக்கும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறோம்; அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. மற்ற மாநிலங்களில் பார்த்தீர்கள் என்றால், இதைவிட அதிகம்.

அதிமுக ஆட்சி இருந்தபோது, அதை செங்குத்தாக மின் கட்டணத்தை உயர்த்தினார்கள். மின் வாரியத்தை கடனில் மூழ்கடித்துவிட்டு போய்விட்டார்கள். அம்மையார் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, உதய் (UDAY) திட்டத்தில் கையெழுத்திட்டது அதிமுக ஆட்சி. அதனால்தான், இந்தக் கோளாறு எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் உண்மை" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x