தருமபுரி | பாறைக்கு வெடிவைத்தபோது கல் சிதறி காயம்: சிகிச்சை பலனின்றி மூதாட்டி பலி

தருமபுரி | பாறைக்கு வெடிவைத்தபோது கல் சிதறி காயம்: சிகிச்சை பலனின்றி மூதாட்டி பலி
Updated on
1 min read

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே விவசாய கிணறு ஆழப்படுத்த பாறைக்கு வெடி வைத்தபோது சீறிப்பாய்ந்த கருங்கல் தலையில் விழுந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தார்.

பென்னாகரம் வட்டம் பிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (63). கணவர் மாரியப்பன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். எனவே, மகன் முருகன் (39) உடன் லட்சுமி வசித்து வந்தார். மேலும், இவர் ஊரக வேலை உறுதித் திட்டம் உட்பட கூலி வேலைகளுக்கும் செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த மாதம் 24-ம் தேதி அப்பகுதியில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணிக்கு லட்சுமி சென்றுள்ளார்.

உணவு இடைவேளையின்போது பிக்கம்பட்டி செலாக்கு மாரியம்மன் கோயில் அருகே சக தொழிலாளர்களுடன் அமர்ந்து பேசியபடி இருந்துள்ளார். இதற்கிடையில், அப்பகுதியைச் சேர்ந்த லதா என்பவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் பாலஜங்கமன அள்ளி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.

அன்று கிணற்றுக்குள் இருந்த பாறைகளில் கம்ப்ரஷர் வண்டி மூலம் துளையிட்டு வெடிமருந்து உதவியுடன் வெடி வைத்து பாறைகளை தகர்க்க முயன்றுள்ளனர். பாறை வெடித்தபோது சீறிப்பாய்ந்து சென்ற கருங்கல் துண்டு ஒன்று செலாக்கு மாரியம்மன் கோயில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்த லட்சுமியின் தலையில் விழுந்துள்ளது. இதில் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்து மயங்கிய லட்சுமியை ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.

அதன்பின்னர், 25-ம் தேதி மாலை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லட்சுமியை அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த லட்சுமி சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். சற்று தொலைவில் கிணற்றுக்குள் பாறைக்கு வைக்கப்பட்ட வெடியால் சீறிவந்த கல்துண்டு விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in