அதிமுகவில் இருந்து மீண்டும் பாஜகவில் இணைந்தார் மைத்ரேயன்

பாஜகவில் இணைந்த மைத்ரேயன்
பாஜகவில் இணைந்த மைத்ரேயன்
Updated on
1 min read

புதுடெல்லி: அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான மைத்ரேயன், மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.

1991ல் பாஜகவில் இணைந்த மைத்ரேயன், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், மாநில துணைத் தலைவராகவும் இருந்தவர். 1999ம் ஆண்டு பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்த மைத்ரேயன், 2001ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அப்போதைய பாஜக மாநில தலைவர் லட்சுமணன் வெற்றி பெற்றார்.

இதையடுத்து 2002ம் ஆண்டு அதிமுக சார்பில் மைத்ரேயன் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட மைத்ரேயன், 2019 வரை அப்பொறுப்பில் இருந்தார். அதிமுகவில் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, ஓபிஎஸ் பக்கம் சேர்ந்தார் மைத்ரேயன். பின்னர், இபிஎஸ் அணிக்குச் சென்றார். அதன் பிறகு ஓபிஎஸ்-ஐ சந்தித்ததன் காரணமாக கடந்த 2022ம் ஆண்டு அவரை கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.

அதன் பிறகு ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த மைத்ரேயன், பாஜகவில் இணையப் போவதாக கடந்த சில மாதங்களாக செய்தி வெளியானது. இந்நிலையில், டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில், மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in