

கரூர்: வீரணம்பட்டியில் காளியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் வீரணம்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் கோயிலில் சாமி கும்பிட்டபோது அவருக்கு திருநீறு தர மறுத்து உள்ளே நுழையக்கூடாது என மற்றொரு தரப்பினர் தடுத்து வெளியே அனுப்பியுள்ளனர். இதனால், கோயில் நிர்வாகம் கோயிலுக்கு பூட்டு போட்டது. இதையடுத்து, இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதை அடுத்து, வட்டாட்சியர் முனிராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. மேலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
பட்டியலினத்தவரை கோயிலுக்கு அனுமதிக்காததை அடுத்தும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையில் வருவாய்த் துறையினர் கோயிலுக்கு சீல் வைத்தனர். இதனைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கோயிலில் சீலை அகற்றக் கோரியும், மாவட்ட ஆட்சியர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூறியும் ஒரு சமூகத்தினர் இரண்டாவது நாளாக இன்றும் வீரணம்பட்டி கோயிலுக்கு முன் உள்ள திருச்சி - பாளையம் தேசிய சாலையில் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்ற நிலை நிலவுகிறது.
இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் கரூர் டிஎஸ்பி, எஸ்பி உள்ளிட்ட உயர்நிலை போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.