Published : 09 Jun 2023 05:55 AM
Last Updated : 09 Jun 2023 05:55 AM

தமிழக அரசுக்கு நிறுவனங்கள் உதவ வேண்டும் - ‘தொழில் 4.0’ மையங்கள் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: அனைவருக்கும் திறமையை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை வழங்கும் தமிழக அரசுக்கு உதவ நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

தொழிலாளர் நலத்துறை சார்பில், சென்னை ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 22 அரசு ஐடிஐ-க்களில் ரூ.762.30 கோடியில் கட்டப்பட்ட `தொழில் 4.0' என்ற தொழில்நுட்ப மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

மேலும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், அரசு ஐடிஐ-யில் பயிலும் 5 மாணவிகளுக்கு வங்கிபற்று அட்டைகளை வழங்கினார். இதுதவிர, மாணவ, மாணவிகளுக்கு தமிழ்வழி பாடப் புத்தகங்களையும் வழங்கினார்.

தமிழகத்தில் 71 அரசு ஐடிஐ-க்களை, ரூ.2,877 கோடி செலவில் உயர் தொழில்நுட்ப மையங்களாக மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த மையங்களில், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து, புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்களை நிறுவி, ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்டிரியல் ஆட்டோமேஷன் உள்ளிட்ட நவீன திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்கு 20 சர்வதேச நிறுவனங்கள் ஒத்துழைப்பு தருகின்றன.

முதல்கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 22 அரசு ஐடிஐ-க்களில்ரூ.762.30 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒரகடத்தில் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகம் அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. தொழிற்சாலைகள் நிறைந்து, பல்வகைப் பொருளாதாரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது. ஆட்டோமொபைல், மின்னணு சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், மின்னணு வாகனங்கள், தோல் சார்ந்த பொருட்கள் என பல்வேறு துறைகளிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட தொழில் துறை ஆண்டறிக்கையில், நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் தொழிற்சாலைகள் இருக்கின்றன, அதிக தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். வளர்ந்துவரும் புதிய துறைகளிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, விண்வெளி மற்றும் பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்னணு வடிவமைப்பு, மருத்துவ சாதனங்கள், மின்சாரப் பொருட்கள் உற்பத்தியில் தமிழகம் அபரிமித வளர்ச்சி கண்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சிறு, குறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகள் மூலமாக உலகளாவிய வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் மூலம் கடந்த 2022 ஜனவரி முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை 110 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ. 2 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டு, 1.97 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த முதலீடுகள் தமிழகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும்.

எனது கனவுத் திட்டங்களில் ஒன்றான ‘நான் முதல்வன்’ திட்டம் வாயிலாக, பணியாளர் வளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. `தொழில் 4.0' தரத்திலான நவீனப் பயிற்சிகளை ஐடிஐ மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 5,140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்படுவார்கள். நவீன தொழில்நுட்பப் பிரிவுகளில் பயிற்சி பெறுவோருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த நிகழ்வு தமிழக அரசின் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் முக்கிய மைல் கல்லாகும்.

அரசு ஐடிஐ மாணவர்கள் மட்டுமின்றி, இதர பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்தோரும், குறு, சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகளில் பணிபுரிவோரும் குறுகியகால பயிற்சிகளில் சேர்ந்து, அதிநவீன தொழில்நுட்பங்களைக் கற்றுப் பயனடைய வேண்டும். டாடா போன்ற நிறுவனங்கள், மனித ஆற்றலை உற்பத்தி செய்யும் நிறுவனங்களாகச் செயல்பட வேண்டும்.

அனைவருக்கும் திறமையை வளர்ப்பதற்கான ஒரே மாதிரியான வாய்ப்பை தமிழக அரசு வழங்கும். எங்களது எண்ணத்துக்கு வலுசேர்த்து உதவ அனைத்து நிறுவனங்களும் முன்வர வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, செல்வம், எம்எல்ஏ-க்கள் செல்வப்பெருந்தகை, ஜோசப் சாமுவேல், தொழிலாளர் துறைச் செயலர் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்புத் துறை ஆணையர் கொ.வீரராகவராவ், டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x