Last Updated : 23 Oct, 2017 09:21 AM

 

Published : 23 Oct 2017 09:21 AM
Last Updated : 23 Oct 2017 09:21 AM

குடிமராமத்து திட்டத்தில் ரூ.100 கோடியில் 1,519 ஏரி, குளம், கண்மாய் சீரமைப்பு: எங்கும் எந்தப் பணியும் நடக்கவில்லை என விவசாயிகள் அதிருப்தி

குடிமராமத்து திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக ரூ.100 கோடியில் 1,519 ஏரிகள், குளங்கள், கண்மாய்களைத் தூர்வாரும் பணி முடிவடையும் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எங்கும் எந்தப் பணியும் நடக்கவில்லை என்று அதிருப்தி தெரிவிக்கும் விவசாயிகள் எந்த ஊரில், எந்த நீர்நிலை, எவ்வளவு செலவில் தூர்வாரப்பட்டது என்ற விவரத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் நீண்டகாலமாக பராமரிப்பின்றி இருப்பதால் மழைக்காலத்தில் இந்த நீர்நிலைகளில் முழு கொள்ளளவு தண்ணீரைத் தேக்கி வைக்க முடிவதில்லை. எனவே, அந்தந்த பகுதி விவசாயிகள் பங்களிப்போடு ஏரிகள், குளங்கள், கண்மாய்களைத் தூர்வாரி பராமரிக்கும் குடிமராமத்து திட்டத்தை முதல்வர் பழனிசாமி கடந்த மார்ச் 14-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் ஏரியில் தொடங்கி வைத்தார். அதன்படி, முதல்கட்டமாக ரூ.100 கோடியில் 1,519 ஏரிகள், குளங்கள், கண்மாய்களைத் தூர்வாரும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், குடிமராமத்து திட்டத்தின்கீழ் நீர்நிலைகள் தூர்வாரப்படவில்லை என்று விவசாயிகள் உறுதியாகக் கூறுகின்றனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவருமான கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் 90 சதவீத பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. 2015-ம் ஆண்டு வெள்ளம் வந்தபோது குறிப்பிட்ட சில வாய்க்கால்களைத் தூர்வாரினால்தான் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். அதன்படி, சில கால்வாய்களில் தூர்வாரியுள்ளனர். குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரியிருந்தால் எந்தெந்த ஏரிகள், குளங்கள், கண்மாய்களில் தூர்வாரப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

தமிழக அரசிடம் விளக்கம்

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: குடிமராமத்து திட்டத்தின்கீழ் எங்கும், எந்தப் பணியும் நடக்கவில்லை. இதுகுறித்து ஆளுநரிடம் புகார் கொடுத்தோம். தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருப்பதாக ஆளுநர் பதில் அளித்தார். இத்திட்டத்தின்கீழ் பணி நடந்திருந்தால் மாநிலம் முழுவதும் எந்த கிராமத்தில் எந்த ஏரி தூர்வாரப்பட்டது என்ற விவரங்களைக் கொடுங்கள் என்று அரசிடம் பலதடவை கேட்டும் பதில் கிடைக்கவில்லை என்றார்.

வெளிப்படையான பதில் தேவை

காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி ப.கல்யாணம் கூறியதாவது: ஏரிகள், குளங்கள், கண்மாய்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ளலாம் என்ற அரசு அறிவிப்பின்படி நீர்நிலைகளில் விவசாயிகளும், ஆளுங்கட்சியினரும் மண் அள்ளினார்கள். இதுதவிர வேறு எந்த வேலையும் நடக்கவில்லை. குடிமராத்து திட்டத்தின்கீழ் பணிகள் நடந்திருந்தால் எந்த மாவட்டத்தில், எந்த கிராமத்தில் தூர்வாரும் பணிகள் நடந்தன என்பதை அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x