Published : 09 Jun 2023 06:00 AM
Last Updated : 09 Jun 2023 06:00 AM

வேளச்சேரி, திருவான்மியூர், சாஸ்திரி நகரில் புதிதாக 424 சிசிடிவி கேமராக்கள், கண்காணிப்பு அறைகள்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார்

சென்னை: வேளச்சேரி, திருவான்மியூர், சாஸ்திரி நகரில் புதிதாக 424 சிசிடிவி கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகளை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.

சென்னையை குற்றங்கள் அற்ற நகரமாக்கும் நோக்கத்துடன் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை சென்னை முழுவதும் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 62,351 சிசிடிவி கேமராக்கள் சென்னையில் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக சென்னை அடையாறில் உள்ள முக்கிய சாலைகள், தெருக்களை இணைக்கும் வகையில் உள்ள இடங்களில் காவல் துறை, தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு புதிதாக 424 கேமராக்களை அமைத்துள்ளது. அதன்படி, வேளச்சேரியில் 150 சிசிடிவி கேமராக்களும், சாஸ்திரி நகரில் 150 சிசிடிவி கேமராக்களும், திருவான்மியூரில் 124 சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வேளச்சேரி காவல் நிலைய வளாகத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில் இந்த 150 சிசிடிவி கேமராக்கள் மற்றும் காவல் நிலையத்தின் கார்கள் மற்றும் இருசக்கர ரோந்து வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் இணைக்கப்பட்டு, கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அவசரக் காலத்தில் ரோந்து வாகன உதவிகளை எளிதில் பெற முடியும்.

அதேபோல் திருவான்மியூர் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டறை திருவான்மியூர் ஜெயந்தி சிக்னல் அருகில் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். சாஸ்திரி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிக்கும் கட்டுப்பாட்டறையில் கேமராக்களை ஒருங்கிணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதில் பெசன்ட்நகர் கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள 20 கேமராக்கள் பெசன்ட்நகர் கடற்கரை காவல் உதவி மையத்தில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட கேமராக்களின் இயக்கத்தை, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்நேற்று பயன்பாட்டுக்காகத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கேமராக்கள் இணைக்கப்பட்ட சிசிடிவி கேமரா கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகளையும் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் சென்னை காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் சிபி சக்ரவர்த்தி, அடையாறு காவல் துணை ஆணையர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x