Published : 09 Jun 2023 06:00 AM
Last Updated : 09 Jun 2023 06:00 AM

செல்ல பிராணிகளுக்கு ஆன்லைனில் உரிமம் பெறும் சேவை: மேயர் பிரியா தொடங்கிவைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் செல்ல பிராணிகளுக்கு ஆன்லைனில் உரிமம் பெறும் சேவையை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நேற்று தொடங்கிவைத்தார்.

சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறையின் கால்நடை மருத்துவப் பிரிவின்கீழ் 4 செல்ல பிராணிகள் சிகிச்சை மையங்கள், 5 நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள், 4 இறைச்சிக் கூடங்கள், 2 மாட்டு தொழுவங்கள் மற்றும் ஒரு தோல் நோய் பராமரிப்பு மையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் 4 செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்களில், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட செல்லப் பிராணிகளுக்கு இலவச சிகிச்சைகள் வழங்கப்படுவதோடு, வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 4 செல்லப் பிராணிகளுக்கான சிகிச்சை மையங்களில் செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.50 பெறப்பட்டு, அவற்றைவளர்ப்பதற்கு உண்டான உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2022-23 நிதியாண்டில் 27 ஆயிரத்து 295 செல்லப் பிராணிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு, 1700 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 5 நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில் தெரு நாய்களுக்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதோடு, வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. கடந்த 2022-23 நிதியாண்டில் 20 ஆயிரத்து 385 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, 15 ஆயிரத்து 755 தெரு நாய்களுக்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிகிச்சை மையங்களுக்கு அழைத்து வராமல் மாநகராட்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்க தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை தொடக்க விழா ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

அதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று, சேவையை தொடங்கிவைத்தார். இதன் மூலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து செல்லப் பிராணிகளுக்கும் ஆண்டுதோறும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்படுவது உறுதி செய்யப்படும். மேலும், வயது முதிர்ந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட செல்லப் பிராணிகளை தெருவில் விடுவதும் தடுக்கப்படும். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட நாய்கள்,பூனைகள் ஆகியவைகளின் எண்ணிக்கை மண்டல வாரியாக கணக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை அனைத்து செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களும் பயன்படுத்திக் கொண்டு, மாநகராட்சி இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவேற்றம் செய்து, ஆன்லைன் வாயிலாக ரூ.50 செலுத்தி, தங்கள் செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு பயனடையுமாறு மேயர் ஆர்.பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி, கால்நடை சிகிச்சை துறை இயக்குநர் குமரவேல், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், கால்நடை மருத்துவ அலுவலர் கமால் ஹூசைன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x