

ஆயுள் தண்டனை பெற்ற மகனை தண்டனையிலிருந்து தப்ப வைக்க சிறார் என்பதற்கான ஆவணத்தை போலியாக தயாரித்து தாக்கல் செய்த தந்தை மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை ஒப்பணக்கார வீதியைச் சேர்ந்தவர் கி.கண்ணன் (எ) பழனிசாமி (23). பாஜக பொறுப்பில் இருந்த இவர், கடந்த 1997-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பாக கோவை மாநகர போலீஸாரால் கைது செய்யபட்ட யாசுதீன், நெட்டை இப்ராஹிம், கூளை இப்ராஹிம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும், கடந்த 2004-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், கூளை இப்ராஹிம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தான் கைது செய்யப்பட்டபோது சிறார் என்றும் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும் கூறி பிறப்புச் சான்றிதழ், ஆவணங்களுடன் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான உண்மைத் தன்மை குறித்து கண்டறிந்து பதில் மனு தாக்கல் செய்ய கோவை மாநகர காவல் ஆணையருக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஆய்வாளர் ஆர்.சினிவாசலு தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், கூளை இப்ராஹிமின் தந்தை அப்துல் ரசாக், மகனை விடுவிப்பதற்காக கோவை வின்சென்ட் சாலையில் உள்ள நல்லாயன் தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்றது போன்று மாற்றுச்சான்றிதழ் தயாரித்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அதன் பேரில் பிறப்பு இறப்பு பதிவு அலுவலரிடம் போலியாக பிறப்புச் சான்றிதழ் பெற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தெரியவந்தது.
இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மாநகர போலீஸார் அறிக்கை சமர்ப்பித்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், மகனை தப்பிக்க வைப்பதற்காக போலி ஆவணம் தயாரித்த அப்துல் ரசாக் மீது வழக்குப் பதிவு செய்து ஒரு மாத காலத்துக்குள் புலன் விசாரணையை முடிக்க வேண்டும். இந்த வழக்கில் இரு மாதங்களில் தீர்ப்பு வழங்கி உச்ச நீதிமன்றத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
போலி ஆவணம் குறித்து விசாரணையில் கண்டறிந்த காவல் அதிகாரிகளை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திங்கள்கிழமை பாராட்டினார்.