குமரியில் அமைச்சர் - மேயர் உச்சகட்ட மோதல்: இரவு வரை கனிமொழி எம்.பி. பேச்சுவார்த்தை

குமரியில் அமைச்சர் - மேயர் உச்சகட்ட மோதல்: இரவு வரை கனிமொழி எம்.பி. பேச்சுவார்த்தை
Updated on
1 min read

நாகர்கோவில்: அமைச்சர் மனோ தங்கராஜ் - மேயர் மகேஷ் இடையே உச்சகட்ட மோதல் நிலவுகிறது. நாகர்கோவிலில் நேற்று இரவு வரை இருதரப்பினரிடமும் கனிமொழி எம்.பி. பேச்சுவார்த்தை நடத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக மேற்கு மாவட்டச் செயலா ளராக இருந்த மனோதங்கராஜ் கடந்த தேர்தலில் குமரி மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே திமுக எம்.எல்.ஏ. ஆவார். அவருக்கு முதலில் தகவல் தொழில்நுட்பத்துறையும். பின்னர் பால்வளத்துறையும் வழங்கப் பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலின்போது உட்கட்சி பூசலால் குமரி கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மாற்றப்பட்டார்.

மேயராக தேர்வு பெற்ற மகேஷிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கட்சி பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில் சுரேஷ் ராஜன் கட்சியின் அமைதியான தொண்டராக வலம் வந்தார். அதேசமயம் அமைச்சர் மனோ தங்கராஜுடன், மேயர் மகேஷ் நெருக்கம் காட்டினார். ஆனால் நாளுக்கு நாள் அதிகாரப் போட்டி அதிகரித்தது. இருவருக்கு மிடையே கருத்துமோதல் முற்றியது.

நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் நடந்து வரும் முக்கிய பணி, டெண்டர் விஷயங்களில் அமைச்சர் மற்றும் அவரது மகன் தலையிடுவதாக மேயர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த சில மாதங்களாக நிலவிய இந்த மோதல் போக்கால் மேயரும், அமைச்சரும் ஒரே நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தனர். மேயர் மகேஷால் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சுரேஷ்ராஜனும், அமைச்சர் மனோ தங்கராஜும் கூட்டணி சேர்ந்தனர்.

இதற்கிடையே பிற கட்சியினர், சுயேச்சை கவுன்சிலர்கள் ஆதரவுடன் மேயரான மகேஷுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் பலர் கட்சி மேலிடத்தில் புகார் தெரிவித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக மேயர் சென்னையில் முகாமிட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல திமுக முக்கியஸ்தர்களை சந்தித்து தனது நியாயத்தை வெளிப்படுத்தி வந்தார்.

அடுத்த ஆண்டு எம்.பி. தேர்தல் நடக்க வுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் இரு மாவட்டச் செயலாளர்களான மேயர், அமைச்சர் இடையே கோஷ்டி பூசல் நீடித்தால், அது கட்சியின் வெற்றியை பாதிக்கும் என மாநில மகளிரணி நிர்வாகி ஹெலன்டேவிட்சன் மற்றும் நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு தகவல் கூறினர். உட்கட்சி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கனிமொழி எம்.பி. நேற்று மாலை அவசரமாக நாகர்கோவில் வந்தார்.

ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் கட்சி ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் இருதரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். அமைச்சர், மேயர் ஆகியோரையும், அவர்களின் ஆதரவாளர்களையும், மாநகராட்சி திமுக கவுன்சிலர்களையும் அழை த்து தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இரவிலும் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. ‘அமைச்சர், மேயர் ஆகிய இருவரின் மாவட்டச் செயலாளர் பொறுப்பு, சுரேஷ்ராஜன், ஆஸ்டின் போன்ற ஒருவருக்கு வழங்கப்படலாம்’ என திமுகவினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in