Published : 09 Jun 2023 04:00 PM
Last Updated : 09 Jun 2023 04:00 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் பல்வேறு இடங்களிலும் வரைமுறையின்றி மரங்கள் வெட்டப்படுவது பொதுமக்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், மாநில நெடுஞ்சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்திருந்தார். இதையொட்டி அந்தந்த மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. திருநெல்வேலியிலும் அரசு பொறியியல் கல்லூரி அருகே சாலையோரம் மரக்கன்று நடப்பட்டது.
மரக்கன்றுகளை நடுவது வரவேற்கப்படும் அம்சம் என்றாலும், அவற்றை தண்ணீர் ஊற்றிமரமாக்குவது வரையில் பராமரிப்பு பணி நடக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இதுபோன்று அரசுத்துறைகள் சார்பில் மரக்கன்றுகள் நடும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால் நடப்பட்ட கன்றுகள் மரமாக்கப் பட்டிருக்கிறதா? என்பதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை.
திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டபோது அவற்றை சுற்றிலும் பாதுகாப் புக்காக வைக்கப்பட்ட இரும்பு கம்பிகள் இப்போது வெறுமனே காட்சியளிக்கின்றன. ஒருசில மரக்கன்றுகள் வளர்ந்துள்ள நிலையில் அவற்றின் தண்டுகள் இரும்பு கம்பிகளால் நெரிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. இந்த இரும்பு கம்பிகளை அகற்றயாரும் அக்கறை செலுத்துவதில்லை.
திருநெல்வேலி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.965 கோடியில் பல்வேறு கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டு மானங்களுக்காகவும், சாலை விரிவாக்கத்துக்காகவும் ஏராளமான மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டி ருக்கின்றன. அவ்வாறு வெட்டி அப்புறப்படுத்தப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிதாக மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்க்கும் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தின் தென்பகுதியில் ஏராளமான மரங்கள் பசுமைப் போர்வையை போர்த்தியது போல் காணப்பட்டன.
இப்போது அந்த மரங்களை எல்லாம் வெட்டி அப்புறப்படுத்திவிட்டு பெரிய வணிகவளாகம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த வணிக வளாகத்தின் மேற்குப்பகுதியில் திருவனந்தபுரம் சாலையையொட்டி நின்ற மரமும் சமீபத்தில் வெட்டி அகற்றப்பட்டது. இச்செயல் பொதுமக்கள், பயணிகள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள், இயற்கை ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்பகுதியில் நிழலுக்காக நின்ற ஒரே மரத்தையும் வெட்டியது குறித்து யாரும் கேள்வி கேட்கவும் இல்லை.
இந்நிலையில் பாளையங்கோட்டை பேருந்து நிலைய சிக்னலில் இருந்து ஹைகிரவுண்ட் செல்லும் சாலையில் தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியின் முன்பகுதியில் சில மரங்களை கடந்த சில நாட்களுக்குமுன் வெட்டிவிட்டனர். இந்த மரங்களை ஏன் வெட்டி அகற்றினார்கள்? என்பது குறித்து தெரியவில்லை.
பழமையான மரங்களின் கிளைகள் இற்றுப்போய் கீழே விழும் நிலையில் காணப்பட்டால் அவற்றை மட்டும் வெட்டி அகற்ற நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக மரங்களையே வெட்டி அப்புறப்படுத்துவது வேதனை அளிக்கிறது. இத்தகைய மரங்களை வளர்த்து உருவாக்க பல நூறு ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். இதுபோல் திருநெல்வேலி நெல்லையப்பர் நெடுஞ்சாலை விரிவாக்கம் என்று இப்பகுதியில் எஞ்சியிருந்த மருதமரங்களையும் வெட்டி அகற்றிவிட்டனர். இதனால் இச்சாலையில் நிழலுக்கு கூட ஒதுங்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது.
கோடையில் சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்வோர், பாதசாரிகள் சாலையோர மரங்களின் அருமையை புரிந்திருப்பர். மரங்களை வெட்டுவது குறித்து கவலை தெரிவிப்போர், இது குறித்து யாரிடம் புகார் தெரிவிப்பது? மரங்களை வெட்டப்படுவதை எப்படி தடுப்பது? என்பது தெரியாமல் தவிக்கிறார்கள். ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மிகப்பெரிய கட்டுமானங்களை உருவாக்க மரங்களை காவு கொடுக்கும் செயலை யார் தடுப்பது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT