

திருவண்ணாமலை: பவுர்ணமி கிரிவலத்துக்காக வேலூர், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் ஜுலை மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு வரும் ஜுலை மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னை கடற்கரை - வேலூர் கன்டோன்மெண்ட், தாம்பரம் - விழுப்புரம், மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே இயக்கப்பட்டு வரும் ரயில்களை, பவுர்ணமி நாளில் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மார்க்கத்திலும் தலா 7 முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை கடற்கரை - வேலூர் மெமு ரயில் ஜுலை 2, 30, ஆகஸ்ட் 30, செப்டம்பர் 28, அக்டோபர் 27, நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 25-ம் தேதி திருவண்ணாமலைக்கு இயக்கப்படவுள்ளது. திருவண்ணா மலையில் இருந்து வேலூருக்கு ஜுலை 3, 31, ஆகஸ்ட் 31, செப்டம் பர் 29, அக்டோபர் 28, நவம்பர் 27, டிசம்பர் 26-ம் தேதி இயக்கப்படவுள்ளது.
வேலூரில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் - 06127) கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூர், அகரம் சிப்பந்தி மற்றும் துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வந்தடையும். இதேபோல், திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்-06128), வந்த வழித்தடத்திலேயே மீண்டும் இயக்கப்பட்டு, வேலூரை காலை 5.35 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயிலில் சோளிங்கர், அரக்கோணம், திருவள்ளுர் வழியாக சென்னை கடற்கரை வரை பயணிக்கலாம்.
மயிலாடுதுறையில் இருந்து...: மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே இயக்கப்படும் ரயில் வரும் ஜுலை 2, 30, ஆகஸ்ட் 30, செப்டம்பர் 28, அக்டோபர் 27, நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 25-ம் தேதி திருவண்ணாமலைக்கு இயக்கப்படவுள்ளது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் - 06130) வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை காலை 11 மணிக்கு வந்தடையும்.
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் - 06129), வந்த வழித்தடத்திலேயே மீண்டும் இயக்கப்பட்டு விழுப்புரம் ரயில் நிலையத்தில் பிற்பகல் 2.15 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயிலில் பண்ருட்டி, கடலூர், சிதம்பரம் வழியாக மயிலாடுதுறை வரை பயணிக்கலாம்.
தாம்பரம் வரை...: தாம்பரம் - விழுப்புரம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் வரும் ஜுலை 2, 30, ஆகஸ்ட் 30, செப்டம்பர் 28, அக்டோபர் 27, நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 25-ம் தேதி திருவண்ணாமலைக்கு இயக்கப்படவுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்துக்கு வரும் ஜுலை 3, 31, ஆகஸ்ட் 31, செப்டம்பர் 29, அக்டோபர் 28, நவம்பர் 27 மற்றும் டிசம்பர் 26-ம் தேதி இயக்கப்படவுள்ளது.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் - 06131) வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை இரவு 10.45 மணிக்கு வந்தடையும். திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழியாக மீண்டும் இயக்கப்பட்டு விழுப்புரம் ரயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயிலில் திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வரை பயணிக்கலாம்.