Published : 09 Jun 2023 04:17 AM
Last Updated : 09 Jun 2023 04:17 AM
திருப்பத்தூர்: பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி கைபேசியில் பேசியபடி பேருந்தை இயக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த புதுமனை பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (58). இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் இருந்து வாணியம்பாடி வரை செல்லும் அரசு நகர பேருந்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் பிரதீப் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்பூர் நோக்கி பேருந்தை இயக்கிச் செல்லும்போது, அவரது கைபேசியை எடுத்த பிரதீப்குமார் பேருந்தை ஒரு கையால் இயக்கியவாறு, யாரோ ஒருவரது எண்ணை தேடி எடுத்து அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு, கைபேசியில் பேசியபடி பேருந்தை இயக்கியுள்ளார்.
இதற்கிடையே, பிளாஸ்டிக் கவரில் இருந்த உருளைக் கிழங்கு சிப்சுகளையும் எடுத்து சாப்பிட்டு சுவைத்தபடியே அவர் கைபேசியில் அரட்டை அடித்துக்கொண்டு பயணி களின் உயிரை பற்றி சிறிதளவும் கவலைப்படாமல் பேருந்தை இயக்கிச் சென்றதை அதே பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தனது கைபேசியில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டார்.
இந்த காட்சி நேற்று வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பேருந்து இயக்கும் போது ஓட்டுநர்களின் முழு கவனமும் பணியில் இருக்க வேண்டும். பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை ஒவ்வொரு ஓட்டுநரும், நடத்துநரும் உறுதி செய்ய வேண்டும். பணியில் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என அரசு போக்குவரத்துக் கழகம் எவ்வளவு தான் அறிவுரைகளை வழங்கினாலும், தங்களது கடமையை உணராத ஒரு சில ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களால் இது போன்ற சர்ச்சைகளில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில், அரசுப் பேருந்தை இயக்கும் போது கைபேசி பேசிய படி பேருந்தை இயக்கி சர்ச்சையில் சிக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பிரதீப் குமாரை சஸ்பெண்ட் செய்து, வேலூர் அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் கணபதி நேற்று உத்தரவிட்டார். இது தொடர்பாக ஓட்டுநர் பிரதீப்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT